16 February 2016 9:19 pm
தமிழரைப் பொறுத்தவரை நூற்றாண்டுகளாக எத்தனையோ செய்திகளை எழுதுகிறோம். மீண்டும் மீண்டும் எழுதுகிறோம். எழுதிய செய்திகள் மக்களிடம் சென்று அடைந்தனவா? நடைமுறைப்படுத்தப்பட்டனவா? என்பது மிகப்பெரிய கேள்வி. தமிழில் உள்ள அற / நீதி இலக்கியங்கள் மிகப் பல என்று சொல்கிறோம். மிகப் பலவாக இருப்பதனாலேயே அந்தச் சமுதாயம் நீதி உடையதாகவும் அறம் பிறழாததாகவும் இருக்கும் என்று நம்பலாமா? சான்றாக, திருவள்ளுவர் தம் அறத்துப்பாலில் அடக்கமுடைமை முதலான உடைமைக் குணங்களை வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு வற்புறுத்தப் பெறுவதாலேயே அவ்வுடைமைக் குணங்கள் மக்களிடம் இருந்தன என்று கொள்ளலாமா? அப்படி கொள்ள முடியாது என்பதை ஓர் எளிய பாமரரும் ஏற்பார். சான்றாக, கள் உண்ணாமை, புலால் உண்ணாமை முதலான அறிவுரைகள் திருவள்ளுவம் தொடங்கி பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி இலக்கியங்களும் தொடர்ந்து வற்புறுத்துகின்றன. சங்க காலத்தை அடுத்துத் தமிழில் நீதி இலக்கியங்கள் பலவாகத் தோன்றியமை கருதத்தக்கது. சங்க இலக்கியங்கள் காட்டும் பல பழக்கவழக்கங்கள் சங்க மருவிய கால நீதி இலக்கியங்களால் கண்டிக்கப் பெறுகின்றன. இதன் பின்னணி இவை நீதிகள் என்று முற்றுமாகக் கண்டறியப்பட்டதாலா? அல்ல. மாறாக, சங்கம் மருவிய காலத்தை ஒட்டித் தமிழரிடம் புதிதாகப் பரப்பப்பட்ட சமய நெறிகளை இவை எதிரொலிக்கின்றன. குறிப்பாக ஜைனம் சார்ந்தனவும் பௌத்தம் சார்ந்தனவும் முன்னிடம் பெறுகின்றன. மகாவீர வர்த்தமானர் வட இந்தியாவில் இருந்து பரப்பிய ஜைன மத நெறிகள் தமிழகத்தில் பரப்பப் பெற்றன. பௌத்த மதத் தோற்றத்திற்கு மூலவரான கௌதம புத்தரே நேரில் தமிழகம் வந்தார் என்றும் இலங்கை சென்றார் என்றும் சென்ற இடங்களில் எல்லாம் பௌத்த நெறிகளைப் பரப்பினார் என்றும் வரலாற்றால் அறிகிறோம். அன்றியும் ஜைனத்தை ஏற்றுக் கொண்ட அரசர்களும் பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட அரசர்களும் தாம் ஏற்றுக்கொண்ட நெறிகளை மக்களிடையே பரப்புவதில் முனைப்பாக நின்றார்கள். இதிலிருந்து ஒன்றைப் பெறலாம். ஓர் அறநெறி அறம் என்பதற்காக மட்டும் இல்லாமல் அவ் அறநெறி ஆளும் அரசரால் வற்புறுத்தப் பெறுகிறது என்பது பெரும் காரணம் என்று தெரிகிறது. பிற்காலத்தில் ஐரோப்பியர் ஆட்சியின் போது மக்களிடம் இல்லாத புதிய நெறியான கிறித்துவம் பரவியது. இசுலாமியர் ஆட்சியின் போது இசுலாமிய மதம் பரவியது. இவை அரசர்களின் வற்புறுத்தலாலா? அரசர்கள் போற்றும் நெறி என்பதாலா? எதன் மூலம் பரவின. இவ்விரண்டு காரணங்களாலும் இந்நெறிகள் பரவின என்று கொள்ளலாம். காலந்தோறும் மக்களை மதங்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றன. அவற்றிற்கு ஏற்றபடி மக்களிடம் புதுப்புது நெறிகள் பரவின. தமிழர்களைப் பொறுத்த வரை அவர்தம் கடந்தகால வரலாற்றைப் படிக்கும் போது ஆளுகின்ற அரசர்க்கு ஏற்பவும் அரசியலுக்கு ஏற்பவும் அவர்கள் மதம் மாறுவது தெரிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இத்தகு நிகழ்வை வெளிப்படையாக நாவுக்கரசர் வரலாற்றிலும் ஞான சம்பந்தர் வரலாற்றிலும் பார்க்கிறோம். நாவுக்கரசர் தன்னை ஆண்ட அரசனை எதிர்த்து சைவ சமயத்தைப் பிடிவாதமாகப் பின்பற்றுவது, திருஞான சம்பந்தர் ஆளும் அரசனின் உடல்நலத்தை மீட்டுச் சமயம் பரப்புவது இதற்கு ஏற்ற சான்று. மங்கையர்க்கரசி என்ற கூன்நெடுமாறனின் மனைவி சைவம் பரப்புவதில் முன்னணியில் இருந்தார். தமிழக வரலாற்றில் தலைமை இடம் பிடித்துள்ள இராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவி தமக்குரிய மதச்சார்பை மன்னவரிடம் பரப்பினார். மக்களிடம் பரப்புவதில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர் ஆகிய நான்கு சைவ நாயன்மார்களும் கோயில்கள் உள்ள தலந்தோறும் நடந்தே சென்றதும் அங்கங்கே தம் அருட்பாடல்களால் கோயில்களை வழிபட்டதும் மக்களை நேர்முகமாகச் சந்தித்ததும் பேசியதும் சரியான சான்றுகள். சிலர்தம் வரலாற்றில் நாயன்மார்கள் நிகழ்த்திய அற்புத வரலாறுகளும் காணப் பெறுகின்றன. சான்றாக, பாம்பு கடித்து இறந்த தம் பக்தனின் மகன் வரலாற்றைச் சைவ இலக்கியம் முன்னிலைப்படுத்திப் பேசுகிறது. இவ்வாறே வைணவ ஆழ்வார்களின் பன்னிரண்டு பேர் வரலாறும் மக்களிடையே வைணவம் பரவியதற்குச் சான்றாக நிற்கிறது. ஆழ்வார்தம் பாடல்கள் இதனைக் காட்டுகின்றன. சைவத்தில் காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதி, வைணத்தில் ஆண்டாள் நாச்சியார் என்கிற பெண் கவிஞரும் முன்னிடம் பெறுகின்றனர். ஜைன – பௌத்த மதத்தை விரட்டி சைவ – வைணவ மதங்கள் தமிழகத்தில் பரப்பப் பெற்றன. இவ்வரலாறே இடைக்காலத் தமிழகம் முழுதும் தொடர்ந்தது. ஏறத்தாழ ஐரோப்பியர் வரவு வரை தொடர்ந்தது. கி.பி.13-14 ஆம் நூற்றாண்டில் மதுரையில் நிகழ்ந்த மாலிக்காபூர் படையெடுப்பு, அதனை ஒட்டித் தமிழகத்தில் நிகழ்ந்த இசுலாம் பரவுதல், தமிழகத்திற்கு இசுலாம் நுழைந்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. கருத்துகளால் கவரப்பெற்று புதிய மதங்கள் பரவின என்று கூறுவதற்கு இல்லை. ஒரு காலத்தில் புலாலே உண்ணக் கூடாது என்கிற கருத்துடைய மதங்கள் பரவிய இடத்தில் புலால் உண்ணாமல் இருக்க முடியாது என்கிற கருத்துடைய இசுலாம் எப்படி பரவியது? ஐரோப்பியர் வருகையை ஒட்டி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் பரவியது. தமிழகம் முற்றும் ஐரோப்பிய ஆதிக்க அடிமைகளாக மாற்றப்பட்டது. ஐரோப்பியரை எதிர்த்தோர் கதி எப்படி ஆகும் என்பதற்கு கயத்தாறு புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் வரலாறு சான்று; ஊமைத்துரை வரலாறு சான்று. ஐரோப்பியர்களை எதிர்ப்பதில் தமிழரசர் வெற்றி பெறவில்லை. தமிழர்கள் எளிதாக அடங்கிப் போயினர். பிற்காலத்தில் ஐரோப்பியர் தமக்குரிய மதமான கிறித்துவத்தை மக்களிடையே பரப்புவதில் பேரளவு வெற்றி பெற்றனர். தமிழர்களிடம் தம் மதம் பரப்புவதில் ஐரோப்பியர் பெரும்பாடு பட வேண்டி இருந்திருக்காது. அருளானந்தர் வரலாறு மக்களிடையே கிறித்துவம் அத்துணை எளிமையாக ஏற்கப் பெறவில்லை என்று காட்டுகிறது. இவ்வரலாற்றைப் பானைச் சோற்றுக்கு ஒரு பதமாகக் கொண்டாலும் ஆண்ட ஐரோப்பியர் மதம் பரப்புவதிலும் மிகுந்த அக்கறை உடையவராய் இருந்தனர். தம் முயற்சிகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். தமிழகம் முழுதும் அவர்கள் விரும்பியவாறு மதமும் மொழியும் பண்பாடும் பரவின; பரவி நிலைபெற்றன. இன்று வரை தமிழரை மத வேறுபாட்டுக்கு அப்பால் ஊன்றியிருக்கும் மொழி ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. பிரிக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைவரும் கிறித்துவர் ஆகாவிடினும் அனைவரும் ஆங்கிலத்தை மதிக்கும் மக்களாக மாறிவிட்டனர். ஒரு மொழி அரசியல் மொழியாகத் தலைமை இடம் பெற்றுவிட்டால், மக்கள் வேறு வழியின்றி அம்மொழியைக் கற்பர். இதே நடைமுறை தொடர்ந்து தமிழகத்தில் தொடருமானால் அடுத்த நூறாண்டுகளில் தமிழர் அனைவரும் இந்தி கற்றுக் கொண்டவராய் இருப்பர். ஆனால் இத்தகு போராட்டத்திற்கு ஐரோப்பியர் தம் நாடுகளில் இடமளிப்பதில்லை. தொடக்க காலங்களில் ஐரோப்பா முழுதும் ஆதிக்க மக்களாக இருந்த இத்தாலி நாட்டு ரோமானியர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தது. அக்காலங்களில் ஐரோப்பா கண்டம் முழுதிலும் ரோமானியர்கள் மொழியாம் இலத்தீன் மொழியே கோலோச்சியது. கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கோயில் வழிபாட்டு மொழியாக, பேச்சு மொழியாக என அனைத்து இடங்களிலும் இலத்தீன் மொழியே தலைமை இடம் பெற்றிருந்தது. காலப்போகில் ஐரோப்பியர் இடையே ஏற்பட்ட ஐரோப்பியத் தேசிய இயக்கத்தின் விளைவாக ரோமானியர்கள் தம் நாட்டிற்குத் திரும்ப வேண்டியதிருந்தது. அவர்தம் மொழியும் வெளியேற வேண்டியிருந்தது. அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் மொழி கோலோச்சத் தொடங்கியது. ஜெர்மனியில் ஜெர்மன், ஃபிரான்சில் பெரென்ச், நெதர்லாந்தில் டச்சு என ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதிக்குரிய மொழிகள் இலத்தீன் பற்றியிருந்த இடங்களைப் பற்றிக் கொண்டன. அந்நிலையே இன்றும் தொடர்கிறது. இத்தகு நிலைமை இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழவில்லை. காரணம் அரசியலும் அடிமைக் குணமுடைய மக்களும்தான். ஆங்கில மொழி இருந்த இடத்தில் இந்தி மொழியைக் கொண்டு வருவதில் கிட்டத்தட்ட வட இந்தியர் வெற்றி பெற்றுவிட்டனர். அத்தகு வெற்றியைத் தமிழர் இன்னும் அடையவில்லை. அவர்கள் அடைவர்களா? என்பதை உறுதி செய்யவும் முடியவில்லை. - முனைவர் க.ப.அறவாணன்