நம்மையும் நாட்டையும் உயர்த்துவது - தமிழ் இலெமுரியா

23 May 2013 2:53 pm

Mumbai local train

நான் பயணம் செய்த நாடுகளில் அதிகமான நகரங்களைக் கண்டது பிரான்ஸ் நாட்டில்தான். பிரான்ஸ் நாட்டின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள பிரெஸ்ட் (Brest), லே ஹாவ்ரே( Le Havre), நான்ட்டஸ் (Nantes), டங்கர்க் (Dunkerque), மார்ஸிலி (Marshelles) மற்றும் லியோன் (Leon) என பல நகரங்களில் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். 

ஒரு முறை மும்பையிலிருந்து பதிவு செய்யப்பட்ட விமானப் பயணச் சீட்டில் சில தவறுகள் ஏற்பட்டதால் நான் பிரான்ஸ் நாட்டில் எந்த இடத்திற்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நகரை விட்டு எதிர் திசையில் உள்ள இன்னோர் இடத்தில் போய் இறங்க வேண்டியதாகி விட்டது. விமானப் பயணச் சீட்டு பதிவு செய்யும் போது ஏற்பட்ட தவறைச் சுட்டிக்காட்டி நான் செல்ல வேண்டிய இடம் டங்கர்க் என்று அங்குள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். பின்னர் அவர்கள் உடனடியாக வேறு விமானப் பயணச் சீட்டை இலவசமாகவே எனக்குத் தந்து லியோன் – பாரிஸ் இடையிலான தூரத்தை நீங்கள் இரயில் பயணம் மூலம் கடந்து செல்ல வேண்டும் என பணித்தார். வெளிநாட்டுப் பயணிகளிடம் அங்குள்ள அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் மிகவும் விரைவாகச் சென்றடைய வேண்டியிருந்ததால் அவர்களின் ஆலோசனையை ஏற்றுச் சில பகுதியை விமானம் மூலமும், சில தூரங்களை இரயில் மூலமும் தொடரலானேன்.

லியோன் என்னும் நகரத்திலிருந்து பாரிஸ் வரை இரயிலில் செல்ல 5 மணி நேரமாவது பிடிக்கும். அந்த இரயில் பயணத்தின் மூலம் பிரான்ஸ் நாட்டின் நாட்டுப்புற ஊர்ச் (கிராமச்) சூழலைக் கண்டுகளிக்க முடிந்தது. எங்கும் பசுமையான சமவெளி, திராட்சைத் தோட்டங்கள் மற்றும் கோதுமை வயல்வெளிகள் என பிரான்ஸ் நாட்டு வேளாண் குடிகளின் (விவசாயிகளின்) உழைப்பும், உணர்வும் என் கண்களுக்கு சிந்தனைக்கு விருந்தாக அமைந்தன.

மிக விரைவாக வந்து கொண்டிருந்த அந்தத் தொடர் வண்டி திடீரென நின்று விட்டது. சில மணித்துளிகள் கழிந்தும் கூட வண்டி நகரவில்லை. காரணம் என்னவென்று அறிந்து கொள்வதற்காக வெளியில் வந்து பார்த்த போது அந்த தொடர் வண்டியின் மேல் அமைந்த மின் இணைப்புக் கருவி கீழே விழுந்திருந்தது. மிகக்கடும் வேகத்தில் இரயில் பழுது பார்க்கப்பட்டு, ஏறத்தாழ 40 நிமிட தாமதத்திற்குப் பின் மீண்டும் அதே வேகத்தில் பாரிஸ் நகரை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தைவிட ஏறத்தாழ 30 நிமையங்கள் (நிமிடங்கள்) தாமதமாக பாரிஸ் இரயிலடியை வந்தடைந்தது.

பாரிசில் என் நண்பர் என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். நான் வேக வேகமாக வண்டியிலிருந்து இறங்கி இரயில் நிலையத்தை விட்டு வெளியே வருகையில், வாசலில் இரயில்வே அதிகாரிகள் நின்று கொண்டு சில விண்ணப்பப் படிவங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். இது என்ன விண்ணப்பப் படிவம் என்று என் நண்பரிடம் விசாரித்த போது, அவர் ஏற்கெனவே எனக்காக ஒன்று வாங்கி வைத்திருப்பதாகவும், உடனடியாக இதை நிரப்பி இங்கே கொடுத்து விடலாம் என்றும் கூறினார். எனக்கு என்ன செய்கிறார் என்று புரியவில்லை. மீண்டும் அவரிடம் இது என்ன என்று கேட்ட போது, “நீங்கள் வந்த இரயில் சுமார் 30 நிமையங்கள் தாமதமாக வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டு இரயில்வே விதிகளின் படி 20 நிமையங்களுக்கு மேல் தாமதமாக இரயில் வந்தடைய வேண்டிய இடம் வந்து சேருமானால், உங்கள் பயணச் சீட்டின் முழுத் தொகையும் திரும்பக் கிடைக்கும்” என்று சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. பொதுமக்களுக்காக இயக்கப் படுகின்ற போக்குவரத்து காலதாமதமின்றி இருக்க வேண்டும் என்பதில் அந்தப் பணியாளர்கள் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களா? என்று வியப்பில் ஆழ்ந்தேன்.

இந்த நிகழ்ச்சியுடன் இந்தியாவில் மும்மை கல்யாண் இரயில் நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். 

ஒருமுறை என் நண்பர் ஒருவர் கல்கத்தாவிலிருந்து வரும் இரயிலில் மும்பை வருவதாக எழுதியிருந்தார். அவரை வரவேற்பதற்காக இரயில் நிலையத்திற்கு ஏறத்தாழ கால் மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட்டேன். ஆனால், என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அந்த இரயில் வழக்கமாக வரும் நேரத்தை விட சற்றொப்ப 20 நிமையங்கள் முன்னதாகவே வந்துவிட்டது. என்னால் நம்ப முடியவில்லை. அங்கும், இங்கும் தேடிப் பார்த்தேன். என் நண்பரைக் காணவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அங்குள்ள பயணச் சீட்டுப் பரிசோதகரிடம் விசாரித்தேன். அவர் சொன்ன பதில் என்னைத் திகைக்க வைத்தது.

“வந்தது கல்கத்தா வண்டிதான். ஆனால், ஏறத்தாழ 24 மணிநேரம் தாமதமாக வந்துள்ளது. நேற்று வர வேண்டிய இரயில் இப்போதுதான் வந்துள்ளது. இன்று வரவேண்டிய இரயில் சுமார் 10 மணி நேரங்கள் தாமதமாக வருகின்றது” என்று கடுகடுப்பான குரலில் சொன்னார். நமது நாட்டின் நிலைமை எண்ணி நொந்து கொண்டேன். 

ஒவ்வொரு மனிதனின் உழைப்பையும் எப்படியெல்லாம் வீணடிக்கிறோம்! எவ்வளவு மனித ஆற்றல் விரயமாகின்றது! இதுபோன்ற தாமதங்களினால் எத்தனை பேர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை முதலான வாய்ப்புகளை இழந்திருப்பார்கள். நாம் யாராவது கவலைப்படுகின்றோமா?

பொதுத்துறை நிறுவன ஊழியர்களானாலும் சரி, அரசு ஊழியர்களானாலும் சரி செய்கின்ற பணியில் ஒழுக்கம் தேவையல்லவா? காலம் கடந்த பின் அது திரும்பக் கிடைப்பதில்லை. இன்று இப்போது இந்நூலைப் படித்துக் கொண்டிருக்கின்றவர்களின் இந்த நொடி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. எனவே, நாம் நமது வாழ்நாளில் எஞ்சியிருக்கின்ற காலத்தையாவது முறையாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வோம். அதுவே, நம்மையும் முன்னேற்றும்; நாட்டையும் உயர்த்தும்.

– சு.குமணராசன்.
முதன்மை ஆசிரியர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி