21 July 2013 2:10 pm
உலகில் அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த பெரு நகரங்களில் ஒன்றாக விளங்குவது இந்தியாவின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவாக விளங்கும் நகரம் மும்பை ஆகும். முன்பு இந்நகரம் பாம்பே (பம்பாய்) என்றழைக்கப் பட்டது. மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமாகவும், இந்தியாவின் பொருளாதாரம், வணிகச் செயல்பாடுகள், கல்வி மற்றும் திரைப்படத் தொழிலின் மையமாகவும் விளங்கியது மும்பை ஆகும். இந்நகரில் இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஏழைகளும் அதிகம், பணக்காரர்களும் அதிகம். 50 விழுக்காட்டிற்கு மேல் குடிசைகளில் வாழும் மக்கள் ஒருபுறம், அடுக்கு மாடிகளும், மாளிகைகளும் மறுபுறம் நிரம்பியுள்ள நகரம் மும்பை ஆகும். பிற மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்களை ஒப்பிடும் போது, மும்பை குடிமக்கள் உழைப்பாளிகள், சுறுசுறுப்பானவர்கள், ஓரளவு நேர்மையும், பொது ஒழுக்கத்தையும் பின்பற்றுபவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
இப்படிப்பட்ட மும்பையின் உயிரோட்டமாக இருப்பது மும்பையின் இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறைகள் ஆகும். தோராயமாக மும்பையில் பணிக்குச் செல்லும் குடிமக்கள் 3 லிருந்து 4 மணி நேரம் போக்குவரத்திலேயே செலவிடுகின்றனர். இது தவிர மும்பையிலிருந்து சற்றொப்ப 150 – 200 கி.மீ தொலைவில் இருக்கும் பூனே, நாசிக், குஜராத் போன்ற இடங்களிலிருந்தும் தினசரி பணிக்கு வந்து செல்கின்றவர் சற்றொப்ப 6 லிருந்து 8 மணி நேரம் பயணிக்கின்றனர்.
மும்பையின் தொடர்வண்டிப் பயணத்தை அனுபவிக்காத பிற இந்திய குடிமக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது மும்பைத் தொடர்வண்டியில் காலை அல்லது மாலை பயணம் செய்து அந்த அனுபவத்தை உணர வேண்டும். கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் இரயில் பயணத்தில் 1 சதுர மீட்டர் பரப்பில் சுமார் 15 பேர் வரை நெருக்கி நின்று பயணிக்கின்றனர்.
மும்பையின் தொடர்வண்டிப் பாதை மத்திய இரயில்வே, மேற்கு இரயில்வே மற்றும் துறைமுக வழித்தடன் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ்(CST) முன்பு விக்டோரியா டெர்மினஸ் (VT) என அழைக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க இரயில் நிலையத்திலிருந்து மத்திய இரயில்வே மற்றும் துறைமுகப் பாதை இரயில்களும், சர்ச்கேட் என்ற இரயில் நிலையத்திலிருந்து மேற்கு இரயில்வே தொடர்வண்டிகளும் புறப்பட்டு, வடக்கு மற்றும் வட கிழக்கு திசை நோக்கிச் செல்கின்றன. இந்த மூன்று வழித்தடங்களும் சற்றொப்ப 305 கி.மீ தூரம் பயணிகளைச் சுமந்து செல்கின்றன. ஒரு நாளைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 76 இலட்சத்து 32 ஆயிரம் ஆகும். உலக அளவில் டோக்கியோ, பாரிஸ் போன்ற நகரங்களில் கூட இவ்வளவு மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்துவதில்லை. இது தவிர மும்பையின் மற்றொரு சிறப்பான போக்குவரத்து பி.இ.எஸ்.டி (BEST) என்று அழைக்கப்படும் பாம்பே எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஆகும். 1947 ஆம் ஆண்டு 242 பேருந்துகள் 23 வழிதடங்களுடன் தொடங்கப்பட்ட போக்குவரத்து நிறுவனம் தற்போது 4680 பேருந்துகளை 400 வழித்தடங்களில் இயக்குகின்றது. இதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை சற்றொப்ப 48 இலட்சம் என அண்மைக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட போக்குவரத்துகளைத் தாண்டி மகிழுந்துகள் (டாக்ஸிகள்) சற்றொப்ப 98,500 மற்றும் தானி(ஆட்டோ)கள் 2,46,500 என்கிற அளவில் இயங்கி வருகின்றன. மேலே தரப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவின் பிற நகர மக்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம். இவையனைத்தையும் தாண்டி சொந்த கார்களில் பயணம் செய்வோர் தொகையும் பல இலக்கங்களைத் தாண்டியுள்ளது. மும்பையில் மட்டும் உள்ள போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 77 ஆயிரம் ஆகும்.
மும்பையின் தெற்கு மற்றும் மையப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது சற்று விரிவான இடம் தேடி நகரிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இவை பெரும் மத்திய இரயில்வே பகுதியில் தானே, கல்யாண், டோம்பிவிலி, அம்பர்நாத், பத்லாபூர், நவி மும்பை, பன்வேல் போன்ற பகுதிகளுக்கும், மேற்கு இரயில்வே பகுதியில் வீரார், போரிவிலி, பயந்தர், நாலா சோப்ரா போன்ற பகுதிகள் வரை நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் மும்பையின் தாதர், அந்தேரி போன்ற இரயில் நிலையங்கள் மிகவும் நெரிசலான ஒன்றாக இருந்த நிலை மாறி தற்போது அதிகப் பயணிகள் பயன்படுத்தும் இரயில் நிலையமாக தானே இரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாதர், சர்ச்கேட், அந்தேரி போன்ற இரயில் நிலையங்களை விட தானே மிகவும் அதிகமான பயணிகளைக் கையாளுகின்ற இரயில் நிலையமாக மாறி வருகின்றது. தானேயில் சராசரியாக 6 இலட்சத்து 54 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதாக அண்மையில் எடுக்கப்பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கின்றது. வி.டி இரயில் நிலையத்தில் 6 இலட்சத்து 37 ஆயிரம் பயணிகளும், தொடர்ந்து அந்தேரியில் 6 இலட்சத்து 4 ஆயிரம் பயணிகளும், தாதரில் 5 இலட்சத்து 77 ஆயிரம் பயணிகளும், சர்ச்கேட் இரயில் நிலையத்தில் 5 இலட்சத்து 5 ஆயிரம் பயணிகளும் பயணிக்கின்றனர் எனக் கணக்கிட்டுள்ளனர்.
மும்பை நகரில் 1993, 2002, 2006, 2008 என தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடைபெற்ற நிலையிலும் மும்பையில் வசிக்கும் மக்கள் தன் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து சுறுசுறுப்புடன் சென்று கொண்டிருப்பது ஒரு வியப்பான செய்தியாகும்.
– கட்டபொம்மன்