14 October 2013 9:20 am
-ஆலம்பட்டு சோ.உலகநாதன் மண் விடுதலையும் பெண் விடுதலையும் தான் உண்மையான விடுதலை அதை தவிர்த்து நாமும் நாடும் விடுதலையடைந்து விட்டதாக நாம் பிதற்றிக்கொள்வது அபத்தமாகவே இருக்கிறது. எப்போது தாய் வழி சமூகம் என்கிற நிலை மாற்றப்பட்டதோ அப்போதிருந்தே நம் தாய்மண் விடுதலையும் கேள்விக்குறியாகி போனது, தற்போது நாம் அடைந்திருப்பது வெரும்‘கைமாற்று விடுதலை‘தான் ஏனெனில் நாம் வெள்ளையர்களின் கைகளிலிருந்து கொள்ளையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதே நாம் விழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் அதை விடுத்து நாம் விடுதலை அடைந்துவிட்டோம் என்பது ‘பூனை கண்களை மூடிக்கொண்டு பொழுது விடியவில்லை’ என்பதாகும். பெரியாரின் போராட்டங்களும், மனித விடுதலைக்கான அம்பேத்கரின் போராட்டங்களும் இந்திய, திராவிட கட்சிகளின் கொள்கைப் புழுதியிலும், இனாம் வழங்களிலும் காணாமல் போய்விட்டன. இந்தியத் திருநாட்டில்!!! மனித அடையாளங்கள் அழிக்கப்பட்டு மனிதரில் ஏற்றத் தாழ்வு என்கிற ‘மனு‘ அடிப்படையிலான அடையாளங்கள் நுழைக்கப்பட்டன. இதை எதிர்த்த மண்ணின் மைந்தர்கள் சிதைக்கப்பட்டனர். அதுவரை கூட்டாகவும், குடும்பமாகவும் சகோதர பாசத்துடனும் வாழ்ந்த தமிழர் தம் அடிப்படை அடையாளமான ‘சேரி‘ என்கிற அடையாளத்தை துறந்து ‘சாதி‘ அடையாள சாக்கடைக்குள் விழுந்தனர். அன்று தமிழர்களின் நரம்புகளில் ஏற்றப்பட்ட ‘சாதி‘ போதனையானது இன்றுவரை தெளிந்துவிடாமல் ஆரியம் பார்த்துக்கொள்கிறதோ இல்லையோ சாதி இந்துக்களும், மதவாதம், சாதிவாதம் என்று இவர்களை ஓட்டு எந்திரங்களாகவே பயன்படுத்தும் அரசியல் கட்சிகளும் பாதுகாத்து வருகிறார்கள் என்பதற்கு நாகரிக காலத்தில்!!! நிகழும் ‘கௌரவ கொலைகளே‘ சான்று பகர்கின்றன. தமிழின அடையாள அழிப்பு சக தமிழரின் சிந்தனை நரம்புகளில் தீண்டாமை என்றும், மூடநம்பிக்கை என்றும்நுழைக்கப்பட்டு தமிழன் சக தமிழனையே தனக்கு கீழான அடக்குமுறைக்கு உட்படுத்தும் மனிதமையற்ற செயல் தொடரப்படுகிறது. இதன் தொடர்ச்சியே ஆரியம் தமிழரின் வரலாறுகளை விழுங்கியது போல் சாதி சக தமிழரின் வரலாறுகளை‘தாழ்த்தப்பட்ட வரலாறுகள்’ என தனியே ஒதுக்கிவைத்தும், இயன்றவரை இருட்டடிப்புகள் செய்தும் வருகின்றன. அத்தகையதொரு மறுக்கப்பட்ட வரலாற்றின் குறியீடுகளை ‘குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி’ என்கிற இந்நூலின் மூலம் வெளிச்சப்படுத்துகிறார் ஆசிரியர். சோ.உலகநாதன். வேலு நாச்சியார் அவர்களின் வரலாறுகள் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் குயிலின் பங்கும் பேசப்படவேண்டும் என்கிற வரலாற்று நீதியினை தவிர்த்தே நம் படைப்பாளிகள் சமூகம் எழுதிவருகிறது என்பதனை தெளிவாக்குகிறார். வேலு நாச்சியாரைப் பொருத்தவரையில் சாதிய கட்டமைப்பிலிருந்து வேறுபட்டே சிந்தித்திருக்கிறார் என்பதற்கு சான்றாக தனது கணவருக்கு அவர் விரும்பிய தலித் பெண்ணையே மணமுடித்தும், மகுடம் சூட்டியும் ஒரே நேரத்தில் இரண்டு புரட்சிகளை செய்திருக்கிறார். வளர்ந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்துவரும் அரசியல்வாதிகளோ இவ்வித புரட்சிகளை அவமதித்தும், சீர்திருத்த காதல் திருமணம் என்பதையும், அரசியலில் தலித் தலைமை என்பதனையும் ஏற்க மறுத்தும், இயன்றவரை சாதி சண்டைகளை வளர்த்தும் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றன. ‘காளையார் கோவில் போர்’ காட்சிகளிலேயே தொடங்கிவிடுகிறது இவ்வீரம் செரிந்த மண்மீட்பு வரலாற்றின் வேகமும், அதை தொடர்ந்தே நூல் முழுக்க பரந்துகிடக்கும் வேலு நாச்சியார் படையின் விவேக நடவடிக்கைகளும், குயிலியின் மண்மீட்பிற்கான தியாக எதிரடிகளும். குயிலி ஒரு தலித் பெண். தலித்துகளுக்கு கல்வியறிவு இருக்க வாய்ப்பில்லை, மேலும் நம்பிக்கைக்கும், அடிபணிதலுக்கும் (விசுவாசம்) எதிர் கேள்வி கேட்க தெரியாத தாழ்வு மனப்பான்மையும் உடையவர்கள் என்கிற ‘சிலம்பு வாத்தியாரின்’ தவறான எண்ணங்களில் மண்ணைத் தூவி. அவர்தம் இனத்துரோக ஆட்காட்டி வேலைக்கு தான் பழியாவது மட்டுமின்றி வருங்காலங்களில் தன் இனம் பழிச்சொற்களுக்கு ஆளாகலாம் என்பதனை முற்றும் உணர்ந்தவளாகவே குயிலி தன் கைகளாலேயே துரோகி சிலம்பு வாத்தியாருக்கு மரணத்தை தண்டயாக வழங்காமல் வரலாற்றுப் பாடமாக வழங்குகிறாள். ஒருகால் குயிலி படிப்பறிவற்று சூழல் காரணமாக இக்கொடுஞ்செயலுக்கு தான் அறியாமலேயே துணைபோயிருந்தால் இன்று வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் குயிலியின் தியாகத்தினை நீக்கி பதிவுகள் செய்யும் வரலாறுகள் அவளை நேரடியான ‘துரோகி’ என்றே கூச்சமில்லாமல் கூறிக்கொண்டிருக்க வாய்ப்பளித்திருப்பாள். இன்று மறைக்கப்படும் அதே வரலாறுகள் தலித்துகளை பழி கூறுவதெற்கென்றே மறைக்காமலும், மறக்காமலும் பதியப்பட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை. நல்லவேளையாக குயிலி கற்ற கல்வி குலம் காத்த கல்வியாகவே அமைந்தது. இயற்கை தலித் வரலாற்றில் குயிலியை நன் குருதி நாயகியாகவே நிலைத்திருக்கச் செய்துவிட்டது நமக்கெல்லாம் பெருமையே. குயிலியின் வீர தீர செயல்களாலும், நுட்பமான திட்டங்களாலும் வேலுநாச்சியாரின் மண்மீட்பு போர்கள் எல்லாம் வெற்றி கண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் குயிலி தான் விரும்பியே வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராகி அவர்தம் உயிருக்கேற்பட்ட ஆபத்துகளை தான் முன்னின்று எதிர்த்து வெற்றிகண்டாள் என்பதற்கு நூல் முழுக்க சான்றுகளும், நிகழ்வுகளும் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டுரை எழுதும் நோக்கில் சில பதிவுகள் தேடி இணையத்தில் உலவும் வேலையில் வேலுநாச்சியாரின் வரலாற்று பதிவுகளில் எல்லாம் குயிலியின் தியாகம் ‘மிக கவனமாகவும், நுட்பமாகவும்‘ தவிர்க்கப் பட்டிருப்பதோடல்லாமல் குயிலியின் தியாகம் குறித்த ஆங்கிலேயே குறிப்பேடுகள் எதுவும் இல்லை என்றே பல ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. வேலுநாச்சியாரின் வரலாறு எவ்விடத்தில் பாடப்படுகிறதோ அவ்விடங்களிலெல்லாம் குயிலின் வரலாற்று நுணுக்கங்கள் பதியப்படவேண்டும் ஏனெனில் உலகின் ‘முதல் தற்கொடை போராளி’யாக உருவெடுக்கும் குயிலி எவ்வித தன்நலமும் இல்லாமல் தான் ஏற்ற தளபதி பதவிக்கு மெருகேற்றும் வகையில் வேலுநாச்சியாரின் இறுதி வெற்றிக்கும் தன்னைக் ‘கொடையளித்து’ வரலாறு முழுக்க நிறைந்து கிடக்கிறாள். இப்படியொரு மாட்சிமைதாங்கிய வரலாற்றை விழுங்க நினைக்கும் ஆரிய ஆய்வுகளைக் களைந்து இனிவரும் காலங்களிலாவது தமிழருக்கென எழுதும் எழுத்தாணிகள் ‘கங்காணிகளாக’ மாறிவிட வேண்டாம் என்கிற கோரிக்கையினை நம்மால் வைக்காமல் இருக்க இயலவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளை அச்சமின்றி வெளிப்படுத்தியுள்ள நூல் இதுவென்றால் மிகையாகாது.வெளியீடு: கமலா உலகநாதன் நினைவு திருக்குலக் கல்வி அறக்கட்டளை ஆலம்பட்டு, குருந்தம்பட்டு அஞ்சல், கல்லல் வழி- 630 305 விலை: 80 ரூபாய். – கவிமதி