15 December 2015 5:37 pm
திசை கடக்கும் சிறகுகள்ஈரோடு தமிழன்பன்மனிதத்தைச் சொந்தக் குரலில் சொந்த நடையில் அழகாகப் புரியும் படி பேசி, அதை அழுத்தமாகப் பதிவு செய்யும் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவருடைய அண்மைக்கால கவிதைத் தொகுப்பு திசை கடக்கும் சிறகுகள்". ஈழத் தமிழர்களுக்காக மட்டும் அல்ல உலகெங்கிலும் மானுடம் பாசிச சக்திகளால் கொடூரமாக நசுக்கப்பட்ட போது கவிஞரின் எழுதுகோல் கருத்தாயுதமாக எழுந்திருக்கிறது. பாலகன் பாலச்சந்திரன் மார்பில் தோட்டாக்களோடு மரணத்தை எதிர் கொண்டதைக் கவிஞர் காட்சிப்படுத்தும்போது அழு, அழு என்று படிப்போரை அழவைக்கும் போது கவிஞர் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறார், ஈழமே ஈழமே….. நீ அழு…. அழக்கூட ஆள் சேரா அநாதையே….. நீ அழு பாலச்சந்திரனின் மரணம் போல்தான், இசைப்பிரியாவின் மரணமும். வேறுபாடு – பாலச்சந்திரன் பாலகன். இசைப்பிரியா இளம்பெண். அதற்குரிய கொடூரம், வக்கிரம் மரணத்தில். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய தேவயானிக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டது. இந்திய அரசு கொதித்தது. இசைப்பிரியா மரணத்தில் கறாரான மவுனத்தை இந்தியா கடை பிடித்தது. "இசைப்பிரியாவும், தேவயானியும்" என்ற கவிதையில் கவிஞரின் வரிகள் இப்படி அமைகின்றன, தேவயானிக்குக்கனியான இந்திய இதயம்இசைப்பிரியாவுக்குக் கல்லானது எப்படி? கவிஞர் கேள்வி கேட்பதோடு நின்று கொள்கிறார். பதில் எதுவும் நேரடியாகச் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் கவிதையும் செத்திருக்கும். ஆனால் பதில் தொக்கி நிற்கிறது. அதில்தான் கவிதையின் நுட்பம் இருக்கிறது. ஒரு காலத்தில் நாட்டில் இயக்கங்கள் இருந்தன. அவை லட்சியங்களை உயிர்த்துடிப்பாய் கொண்டு இயங்கின. இயக்கங்கள் கட்சிகளாகின. கட்சிகள் பிளவு பட்டன. பிளவு பட்டவை மீண்டும் பிளவு பட்டன. தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் சாதி, மதம், இனம் என்ற போர்வைகளைப் போர்த்திக் கொண்டு தமிழன் முன் வந்து நின்றான். தமிழன் என்ன செய்தான்? கவிஞர் சித்திரம் தீட்டுகிறார்."கள்ளுக் கடைக்குப் போவது போல்எங்கள் தமிழன்கட்சிகளுக்குப் போனான்கட்சிகள் மோதிரங்களைக் காட்டிவிரல்களைப் பறித்துக் கொண்டன"பெரியாரைக் "கருணை மறவர்" என்று அழைக்கிறார். பெரியாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நமக்குப் பெரியாரே நன்றி சொல்வாரா? சொல்வார் என்கிறார் கவிஞர். எப்படி?"ஆயிரம் பல்லாயிரம் கண்ணாடிகளாகித் தந்தை பெரியார்முகத்தைப் பிரதிபலித்துத் தமிழர்கள்அவருக்கு நன்றி சொல்லலாம்முகத்தைப் பிரதிபலிப்பதை நிறுத்திவிட்டுஅவருடையஅகத்தைப் பிரதிபலித்தால்தமிழர்களுக்குத்தந்தை பெரியார் நன்றி சொல்வார்"பத்தாண்டு பழகிய பாரதிதாசனைப் பற்றிய நீண்ட கவிதைகளும் இத்தொகுப்பை அலங்கரிக்கின்றன. பாரதிதாசன் தொடர்பான கவிதையில் தமிழன்பன் ஒரு மகாகவி எப்போது சாத்தியம் என்று கேள்வி கேட்கிறார்."ஒரு மகாகவிஎப்போது சாத்தியம்?""கொல்லர்களில் ஒரு மகா கொல்லன்கிடைக்கும் போதுதச்சர்களில் ஒரு மகா தச்சன்படைக்கப்படும் போது…நெசவாளியில் ஒரு மகா நெசவாளிதறியால் நெய்யப்படும் போதுஒரு மகாகவி உருவாவதும் – அப்போதுசாத்தியம்." மகாகவிக்கு தமிழன்பன் வகுக்கும் இலக்கணம் அவருக்கும் பொருந்தும். இலக்கணத்திற்கு இத்தொகுப்பே இலக்கியம்.வெளியீடு : பூம்புகார் பதிப்பகம், பு.எண்.127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை – 600108. (பக்கங்கள்: 360 விலை: 275)"