14 November 2015 9:53 pm
புத்தகம் பூத்த பொய்கை (பவள விழா மலர்)புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி இணையரின் மாபெரும் உழைப்பால் நிறுவப்பட்டு ஞானாலயா எனும் நூலகத்தை பொது மக்கள், மாணவர்கள் படித்திடவும் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் இங்கே தங்கி தமது ஆய்வுகளை செய்திடவும். அவர்கள் தங்கிட தனி அறைகளும் உணவும் அளித்து மகிழும் இந்த இணையருக்கு நிகர் யாருமில்லை என்பதை அறியும் போது உள்ளபடியே அகம் மகிழ்கிறது. இந்த நூலகத்தில் சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்களுக்கு மேல் பாதுகாத்து வருவதுடன் மக்கள் படித்து பயன் பெறவும் உதவுகிறது என்பதனை இந்த நூல் வழியாக அறியலாம். பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி இணையரின் தூய்மையான இப்பணிக்கு பொருள் உதவி எங்கிருந்தும் கிடைப்பதில்லை. முழுக்க, முழுக்க தங்களின் சேமிப்பு, ஓய்வூதியம் என அனைத்தும் ‘ஞானாலயா’ நூலகத்திற்கு செலவிட்டு வருவதாக பா.கி – டோரதி இணையர் கூறுகின்றனர். அரசாங்கம் அல்லது பெரிய நிறுவனங்கள் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் தமிழ்ப் பணியை பல்வேறு இடருக்கு நடுவில் செய்து வருவது மிகப் பெரிய அறப் பணியாகும். பா.கிருஷ்ணமூர்த்தி தமது வீட்டையே நூலகமாக மாற்றி, நூலகத்தை கோயிலாக மாற்றியுள்ளார். ஆம்! ஞானாலயா எனும் கோயிலை 50 ஆண்டுகளாகத் தேடித் தேடி சேகரித்த நூல்களைக் கொண்டு, 1800 சதுர அடியில் இலட்சத்திற்கு மேற் பட்ட நூல்களோடும், தமிழ்க் களஞ்சியமாக, இலக்கியச் சுரங்கமாக இதை வடிவமைத்துள்ளதை இந்நூல் வழியே அறிய முடிகிறது. ‘ஞானாலயா’ நூலகத்தின் வாயிலாக 100 மாணவர்கள் பி.எச்.டி பெற்றுள்ளதை பெருமை பொங்க குறிப்பிடுகிறார். பா.கிருஷ்ணமூர்த்தி இவர் வெறுமனே நூலக காப்பாளராக இல்லாமல் சிறந்த கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவர் என அறிய முடிகிறது. ‘குமரி மலர்’ என்கிற மாத இதழை 40 ஆண்டு காலமாக நடத்தி வந்த ஏ.கே.செட்டியாரின் கனவான, தென் தமிழகத்தில் நல்லதொரு நூல்நிலையம் அமைய வேண்டும் என்கிற எண்ணம் தான் தங்களுக்கு இந்த நூல் நிலையத்தை அமைக்க தூண்டுகோலாக அமைந்தது என்கிறார் திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி. இவரும் ஓர் நல்ல எழுத்தாளரே. இன்றைக்கு தமிழ் எழுத்துக்களை கணினியின் அதிவேக பயனீட்டிற்கு உகந்தவையாக உள்ளதென்றால் அது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமேதான். இந்த சீர்திருத்த எழுத்தை முதன் முதலில் உருவாக்கியவர் சுப்பையா என்கிற மலேசியத் தமிழர்தான். சுப்பையா தாம் தயாரித்த எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியாருக்கு மதிப்பீட்டிற்காக அனுப்பியுள்ளார். பெரியாரும் இதை ஆய்வு செய்து சுப்பையாவிடம் ‘நீங்கள் தனி மனிதராக இந்த சீர்திருத்தத்தை செய்யமுடியாது. எனவே நான் குடியரசு இதழில் இதை நடைமுறைக்கு கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி குடியரசுவில் இந்த சீர்திருத்தத்தை கொண்டுவந்தார். பின்பு அரசாங்கமும் இதை ஏற்றது என்பதை நாம் அறிந்த ஒன்று ஆனால் முதலில் சுப்பையா என்கிற மலேசியா தமிழர்தான் எழுத்துச் சீர்திருத்தத்தை தயாரித்தவர் எனும் செய்தி எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்த செய்தி தம்மிடம் உள்ள நூலில் உள்ளன என கூறுவதையும்… கி.வா.ஜ 1937ஆம் ஆண்டு கலைமகள் இதழுக்கு ஆசிரியரானார் தொடர்ந்து 1988ஆம் ஆண்டு தாம் மறையும் வரை பணியாற்றியுள்ளார். ஓர் இலக்கிய மாத இதழில் ஐம்பது ஆண்டுகாலம் பணியாற்றி பெருமை படைத்ததை குறிப்பிடுவதோடும்… பழம் பெரும் எழுத்தாளர் டி.எஸ்.எஸ்.ராஜனின் சுயசரிதை நூலுக்கு கல்கியிடம் முன்னுரைக்காக வந்துள்ளது. வெளியே சென்று திரும்பிய கல்கி இரவு 1.30 மணிக்கு இந்நூலை வாசிக்கத் தொடங்கி காலை 5.30 மணிக்கு படித்து முடித்த பக்கங்கள் 335 – முழுவதையும் படித்து முடித்து 6 பக்க முன்னுரை எழுதியதையும் எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கமுடியும் என்கிற அளவுக்கு ஈர்த்த ஒரு நூல் டாக்டர் எஸ்.எஸ்.ராஜனின் நூல் என்பதையும் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். நாம் ஒவ்வொரு இடத்திலும் நின்று சுவைத்து அனுபவிக்க வேண்டிய மலர்கள் இது. டோரதி அம்மையாரின் கட்டுரைகளில் இரவீந்திரநாத் தாகூர், மார்கஸ் அரேலியஸ் பற்றியும் அரிய தகவல்கள் அடங்கியுள்ளது மேலும் இவர்களின் நூலகத்தில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் வெளி வந்த 400க்கு மேற்பட்ட நூல்கள் நிறைந்துள்ளது. இந்நூல் சாதாரண மலர் போல் இல்லாமல் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய கருத்து கருவூலம்.வெளியீடு : ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622 002 (பக்கங்கள் : 280 விலை : 250)