காவிரி நீரில் கரையும் இறையாண்மை - தமிழ் இலெமுரியா

15 October 2016 3:25 pm

தடை தவிர்த்துப் பாயும் தண்ணிலவின் ஒளி போல மடை அவிழ்த்து மண்ணும் மக்களும் செழிக்கக் கரைபுரண்டோடிய காவிரியின் பெருமையினை, வசையில் புகழ் வியங்கு வெண்மீன் திசைதீர்ந்து தெற்கு ஏகினும் தற்பாடிய தளி உணவில் புள் கேற்பப் புயல் மாறி வான் பொய்யினும் தான் பொய்யா மலைத் தனைய கடற் காவிரி புனல் புரந்து பொன் கொழிக்கும்என பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணார் பாடினார். வடைதிசை வெள்ளி தடுமாறி தென்திசை ஏகினும், குடமலையில் பிறந்து குனகடலை அடையும் காவிரியின் வளம் குன்றுவதில்லை என்பது பாடலின் பொருளாகும். ஆனால் அத்தகைய காவிரி ஆற்றில் இன்று ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது" என்று கருநாடக முதல்வர், கருநாடகத்தின் பிற அரசியலாளர்கள் அனைவரின் ஒருமித்தக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘அருமைக்குரியது ஒருமைப்பாடு’ என அகில இந்திய தேசியம் பேசும் அரசியல் கட்சிகள், வினை முடிக்க வேண்டிய நடுவண் அரசு என அனைத்தும் வேடிக்கை பார்த்து ஊனமுற்றிருக்கும் ஊமையனாய், விவரமற்றவர் போல் வெட்டியாய் நின்று கொண்டிருக்கின்றனர். உழைப்பையும் உறவையும் உயர்வாய் மதிக்கும் தமிழினத்தவர் பலர் இன்று சிறு மதியாளர்களின் கொடுந் தாக்குதல்களுக்கு உட்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஏதிலிகள் போல கருநாடக மாநிலத்தில் காட்சியளிக்கின்றனர். காவிரி நீர்ப் பங்கீடு 1892, 1924, 1974, 1991, 2006, 2013, 2016 என பல்லாண்டுகளாக பயனின்றித் தொடரும் ஒரு சிக்கலாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தடையின்றி பெருக்கெடுத்தோடிய காவிரி அழிந்தொழிந்து அநாதைச் சிறுமி போல் அழுது கொண்டிருக்கிறது. 1924 ஆம் ஆண்டு ஆங்கில அரசாட்சியின் கீழ் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தமிழ்நாடு பெற வேண்டிய நீர் 575.68 டி.எம்.சி. 1972 அம் ஆண்டு பட்டேல் குழு அறிக்கையின் படி தமிழ்நாடு பெற வேண்டிய நீர் 489 டி.எம்.சி ஆகும். 31.05.1972இல் நடுவண் அமைச்சர் கே.எல்.ராவ் முன்னிலையிலும் இவ் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பெற வேண்டிய நீர் 489 டி.எம்.சி. 1974 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜெகஜீவன் ராம் தலைமையிலும் உறுதி செய்யப்பட்ட நீர் 489 டி.எம்.சி ஆகும். 1976 நெருக்கடி கால நிலையில் முன் வைக்கப்பட்ட அளவின் படி, தமிழ்நாடு பெற வேண்டிய அளவு 389 டி.எம்.சி.யாக குறைந்தது. 1980 ஆம் ஆண்டு கருநாடகம் முன்வைத்த திட்டத்தின் படி, இந்த நீரின் அளவு 375 டி.எம்.சி. 1991 காவிரி ஆற்றுச் சிக்கல் நடுவர் மன்றம் மேட்டூர் அணைக்கு தோராயமாக வரும் நீரின் அளவைக் கணக்கிட்டு இடைக்காலத் தீர்ப்பாக அறிவித்த அளவு 205 டி.எம்.சி ஆக மேலும் குறைந்தது. போதுமான மழையில்லாத நிலையில் குறுவைச் சாகுபடிக்காக சூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாடு பெற வேண்டிய நீரின் மிகக் குறைந்த அளவு 137 டி.எம்.சி என அதனினும் குறைந்தது. அதன் பிறகு இரு மாநிலங்களின் வறட்சி நிலையினைக் கருத்தில் கொண்டு நதி நீர் ஆணையம் பங்கீடின் படி, தமிழ்நாடு பெற வேண்டியது 122 டி.எம்.சி எனக் குறுகியது. இதன் சாகுபடி காலத்தில் பெற வேண்டியது 48 டி.எம்.சி. எனக் குறுகிக் குறுகி இதையாவது செயல்படுத்த வேண்டி சற்றொப்ப 22 ஆண்டுகள் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2013, பிப்ரவரித் திங்களில் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் நதிநீர் ஆணைய ஆணைக்குப் பிறகும் உச்சநீதி மன்ற ஆணைகளுக்குப் பிறகும் அன்றைய தலைமையமைச்சரின் ஆணைக்குப் பிறகும் கருநாடக அரசு தன் தன்மையைத் தளர்த்திக் கொள்ளவில்லை. எதற்கும் கட்டுப்படவில்லை. இச்சூழலில் தமிழ்நாடு மீண்டும் உச்சநீதி மன்றத்தினை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. விரைவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இதற்கொரு முடிவைத் தேட வேண்டுமென நடுவணரசின் கதவையும் தட்டியது. ஆட்சிகள் மாறின ஆனால் காட்சிகள் மாறவில்லை. இந்திய நாட்டில் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட உச்சநீதி மன்றம் காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்கு தருவது குறித்து அண்மையில் தீர்ப்பு வழங்கியது. நடுவணரசுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டது. ஆனால் அண்டை மாநிலமான கருநாடக அரசு உச்சநீதி மன்றத்தை எதிர்த்து நின்றது, காவிரி ஆணையம் அமைக்க வேண்டிய நடுவணரசும் மறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டுமென ஆணையிட்டு 3 ஆண்டுகளாக எதையும் பொருட்படுத்தாத நடுவணரசு தற்போது இப்படி ஆணையிட உச்சநீதி மன்றத்திற்கு உரிமையில்லை என்று எதிர் அறிக்கை தாக்கல் செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இரக்கமின்றி பலியிட்டுள்ளனர். தேளின் கொடுக்காய் கொட்டி ஒளிவோரைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வேடதாரிகள் வெளிச்சத்தில் தெரிகின்ற நேரம் இது. கருநாடகம் தன்னை இந்தியாவின் ஒரு உறுப்பினராக எண்ணாது தனி நாடு போல் நடந்து கொள்கிறது. இந்தச் சூழலில் எங்கிருந்து உருப்பெறும் ஏக இந்தியா?  இந்திய இறையாண்மையை, பன்முகத் தன்மையினை காலில் போட்டு கசக்கி அழிக்கும் நடுவணரசு மற்றும் கருநாடக அரசின் போக்குகள் கண்டிக்கத் தக்கவையாகும். ஏக இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் காவிரி நீர்ச் சிக்கலில் கரைந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்திய நாடு சிதறுண்டு போகும் என்பது எம் கணிப்பாகும். கேடுகளின் காடாக கீழ்மைகளின் வீடாக எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்த நாடு? நம்பிக்கை மோசத்திற்கும் நயவஞ்சகத்திற்கும் நாணயக் கேட்டிற்கும் மற்றொரு பெயர் தான் அரசியலா? இதுதான் இந்திய தேசியமா? எதிரிகளால் சூழப்பட்டுள்ள தமிழ் மக்கள் தற்போதாவது விழிப்புற வேண்டும். விடியலைக் காண முயல வேண்டும். வீம்புக்கு குறை காண்பது தவிர்த்து தமிழர்கள் தன் சிந்தனையைக் கூர்மையாக்கி உலகத் தமிழர் ஓரணியில் திரள வேண்டும். தங்கள் எதிர்கால வாழ்வுக்கு உரிமையும் இறைமையும் சார்ந்த தனித்தமிழ் நிலமே விடையாக அமையுமா? என தமிழ்மக்கள் சிந்திக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளி விடாமல் இந்திய இறையாண்மையைக் காப்பது நடுவணரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் என வலியுறுத்துகிறோம். சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். திருக்குறள் (934) – திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefஐப்பசி – 2047(அக்டோபர் – 2016)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி