தமிழ் நாட்டின் போதையும் பாதையும் - தமிழ் இலெமுரியா

18 August 2015 9:59 am

அண்மையில் சில மாதங்களாக தமிழ் நாட்டில் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் செய்து வருவதாக தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் மூலம் அறிகின்றோம். அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சில மதுக் கடைகளையும் ஊழியர்களையும் அடித்து நொறுக்கிய வன்முறை நிகழ்வுகளும் அரங்கேற்றம் பெற்றுள்ளன. மதுவுக்கு எதிராகப் பல காலம் போராடி வந்த சசி பெருமாள் என்பவர் தன் போராட்டக்களத்திலேயே உயிர் துறந்திருப்பது இப்போராட்டக் களத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.  தற்போது ஆளும் கட்சித் தவிர சற்றொப்ப எல்லா அரசியல் கட்சிகளும் இப்போராட்டத்தை கையெலெடுத்திருப்பதும், மறைந்த சசி பெருமாள் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்து தத்தம் மதுக் கொள்கையினை வெளிக்காட்டிக் கொள்கின்ற போக்கும் எந்த அளவு உளப்பூர்வமானது என்பதில் எமக்கு ஐயம் ஏற்படுகின்றது. முற்றான மது விலக்குக் கொள்கைக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகள், பெண்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் திரண்டிருப்பது மெய்மையானால் தமிழ் நாட்டில் பல்லாயிரம் கோடிக்கணக்கான மது எவ்வாறு விற்பனையாகின்றது?   சங்க காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் கள் குடிக்கும் பழக்கம் குடி கொண்டிருந்தது; அதன் விளைவுகள் தீமைகள் குறித்து நமது நீதி இலக்கியங்கள் திருக்குறள், மூதுரை, நாலடியார் உட்பட பல இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன. எனினும் இப்பழக்கம் தமிழ் நாட்டிலும் சரி, உலகின் பிற பகுதிகளிலும் இதுவரை முற்றாக ஒதுக்கப் படவில்லை என்பது யதார்த்தம் ஆகும். தனி மனித பண்பு கெடுவதற்கும் உடல்  கேடுகளை விளைவிப்பதற்கும் ஊற்றாக இருக்கிற  இப்பழக்கத்தை பிறருக்குத் தெரியாமலும், சிலர் முகமூடியுடனும் இன்று வரை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். எனினும் இந்நிலை தனி மனித பண்பு தவிர்த்து  பெரும் சமுகக் கேடுகளை விளைவிக்கவில்லை. எனவே தான் உலகின் பல நாடுகளிலும் மது விற்பனை ஒரு விவாதத்திற்குரிய பொருளாக இல்லை. அவர்களின் அன்றாட வாழ்வில் பலருக்கு மகிழ்ச்சியின் வடிகாலாகவும், சிலருக்கு வேதனைகளின் வடிகாலாகவும் விளங்குகின்றது.  இந்திய நாட்டில் இன்று வரை இறுக்கமாகக் கட்டிக் காப்பாற்றப் படுகின்ற படிநிலை சமுக அமைப்பில் மனித மலத்தை மனிதனே அள்ளிச் செல்வதையோ கழிவுநீர்க் கால்வாய்களில் கீழிறங்கி பணியாற்றவென்றே சில குறிப்பிட்ட சாதிமக்களை இன்று வரை ஈடு படுத்தியிருப்பதையோ தடுக்க இயலாத இந்தியச் சமுகம் மதுவின் கொடுமைகள் பற்றிப் பேசுவது விந்தையாகவே உள்ளது. உழைக்கும் மக்களின் மனச்சோர்வைப் போக்க சில நேரம் மதுவே ஒரு வலி நீக்கி(நிவாரணி)யாக செயல் பட்டுள்ளது. தங்களின் தாழ் நிலையைத் தலைவிதி என்று நம்பவைத்து தலைமுறை தலைமுறையாக ஒடுக்கி வைத்திருப்பது யார்? அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வருமானம் ஈட்டும் ஒரு கருவியாகவும், தங்களின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த மக்களை மயக்கத்தில் வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணர்ந்து 1790 ஆம் ஆண்டு மது உற்பத்தி செய்தல், மது விற்பனை செய்தல் ஆகியவற்றை  ஆளுகின்ற அரசாங்கமே சட்டமாக்கியது. இதன் விளைவாக முதலாளித்துவம் தன் கொள்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியை நிறைவு செய்தது. ஏழை எளிய மக்கள் மேலும் ஏழையானார்கள். அடிமைத்துவம் மேலும் வலுப்பெற்றது. இந்நிலை இந்திய விடுதலைக்குப் பிறகு முற்றாகத் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டாமா? ஆனால் அது நிகழவில்லை. வெள்ளையர் ஆண்ட மண் பின்னர் இன்று வரை சில கொள்ளையர்களால் ஆட்சிப்படுத்தப் பெறுவது முதலாளித்துவத்தின் நீட்சியாகும்.  இதன் தன்மையினை வெள்ளையர் காலத்திலேயே ஓரளவு புரிந்து கொண்ட காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக கள்ளுக்கடை மறியல் போராட்டம் தொடங்கினார். இப்போராட்டத்தின் தேவையை காந்தியாருக்கு உணர்த்தியவர் தந்தை பெரியார் ஆவார். அதை தமிழ் நாட்டில் தந்தை பெரியார் தன் துணைவியார், தங்கையார் ஆகியோருடன் உளப்பூர்வமாக நடத்தி தன் சொத்தாக விளங்கிய தென்னை மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து குடும்பதோடு சிறையில் வாடினார். ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அதே வேகத்தைக் கடை பிடிக்க இயலவில்லை. காரணம் இச் சமூகத்தில் சாதியக் கட்டுக் கோப்பும் முதலாளித்துவமும் நிலைத்த ஒன்றாக இருக்க வேண்டுமென்பதே பலரின் கொள்கையாக உள்ளது. இதன் விளைவாகவே குடிப்பழக்கம் ஒன்றே சமுகச் சீர்கேடு என்று சொல்லி பிற சமுக அவலங்களின் சீர் கேடுகளாக விளங்கும் சாதி, ஊழல், குறுக்குவழிப் பொருள் சேர்ப்பு என அனைத்தும் மூடி மறைக்கப் படுகின்றன. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கும் சாதியை நிலை நிறுத்தும் மாநாடுகளுக்கும் ஆட்கொணர்வுக்கு வித்தாக விளங்குவதே கால் புட்டிகளும் (குவாட்டர்) கறிக்கோழிக் கலவையும் எனபதை யாராலும் மறுக்க முடியுமா? மதுவின் கெடுதல்கள் குறித்து இன்று பலரால் பேசப்படுவது விழிப்புணர்வு அல்ல. மாறாகத் தங்களை ஒரு புனிதத் தன்மை வாய்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒரு முகமூடி என்று தான் எம்மால் உணர முடிகிறது. மதுக் கொள்கை என்பது அரசுக்கும், பெரும்பாலான காவல் துறையினருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், நிருவாக ஊழியர்களுக்கும் பல அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் ஒரு தங்க முட்டையிடும் வாத்து போன்று உள்ளது. எனவே இதில் பெரும்பாலான மக்கள் விரும்புகின்ற ஒரு கொள்கை முடிவு என்பது கானல் நீரே. தன்னலத் தலைமைகளே இந்தத் தாழ்வுக்குக் காரணமாகும். பதவிப் பித்தும் பண்பிலாப் பொதுவாழ்வும் தன்னிச்சைப் போக்கும் தற்குறி நிலையுமே நம் சமுகக் கேடுகளின் ஊற்றுகள். விதி விலக்காக வெகு வெகு சிலர் தான்.  மேற்சொன்ன கருத்துகளுக்காக நாம் மதுவின் போதையை  விற்பனையை குமுகாய அவலங்களை நியாயப்படுத்தவில்லை. நெறிப்படுத்த முயலவில்லை. மாறாக இந்தப் போதையை விட இன்று தமிழ் நாட்டு இளைஞர்கள்,  பொது மக்கள்,  அரசியல் கட்சிகள், நிருவாக ஊழியர்கள் என அனைவரிடமும்  புகுத்தப் பட்டுள்ள சாதி போதை, ஊழல் போதை, பொருளீட்டும் போதை ஆகிய அனைத்தும் மதுவின் போதையை விடக் கொடியது; தீங்கானது; தமிழ்ச் சமுகத்தின் வளர்ச்சியின் தடைக் கற்கள் என்பதை உணர்ந்து அவற்றைக் களைவதே சமுக நலவிரும்பிகளின் முதன்மைப் போராட்டமாக அமைய வேண்டும் என்பதை உணர்த்த விரும்புகிறோம். தனி மனித வாழ்வென்பது அதில் நிறைந்துள்ள மனிதம் எவ்வளவு என்பதைப் பொறுத்து அமையும். பொது வாழ்வு என்பது அதில் நிறைந்துள்ள புனிதம் எவ்வளவு என்பதாகும். கசடுகள் நீங்கிட கடமையாற்றிட கற்றோரே வாருங்கள்!  களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தனைத் தீத்துரீஇ யற்று    (குறள் 929) -திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefஆவணி – 2046(ஆகஸ்ட் – 2015)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி