நீதியின் குரல் - தமிழ் இலெமுரியா

15 May 2016 6:25 pm

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மக்களாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பேற்க வாய்ப்பு பெறும் அரசியல் கட்சிகள் தத்தம் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஊற்றாக விளங்குகின்ற தனிமனித உரிமை, நாட்டு வளர்ச்சி போன்றவற்றை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக தங்களின் மறைமுகக் கொள்கைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளன. அண்மைக்கால நிகழ்வுகள் சில இந்த உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. ஆட்சிப் பொறுப்பில் அமரும் எக்கட்சியாயினும் எதிர்க் கட்சிகளை முடக்க நினைப்பதும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பம் விளைவிப்பதும் தொடர் கதையாகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 356வது விதியை தவறாகவும் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்குவது 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி காலத்திலிருந்து இன்று வரைத் தொடரும் ஒரு மக்களாட்சி விரோதப் போக்கு ஆகும். இதில் எக்கட்சி ஆண்டாலும் (தற்போதைய சூழலில் பா.ச.க.) இந்தக் கொள்கையில் மாற்றம் இல்லை. இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஆட்சியில் அமர்ந்திருந்த உத்தரகாண்ட் மாநில காங்கிரசு அரசை முறைகேடாக 356வது விதியை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டமை, அதற்கு நீதிமன்றங்கள் தடை விதித்தமை, பின்னர் மைய அரசு மேல் முறையீடு என இச்சிக்கல் நீண்டு கொண்டே போயின. ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிறது என்பதற்காக அரசியல் சட்டத்தை எவ்வாறாகிலும் வளைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதி மன்றத்தின் தெளிவான தீர்ப்பு சற்று ஆறுதலாக உள்ளது. அதாவது குடியரசு தலைவர், ஆளுநர் போன்றோரின் பிரகடனங்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் நீதித்துறை செயல்பாட்டுக்கு அப்பால் அல்ல என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி அம்மாநிலத்தில் நிறுவியுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை கணக்கில் கொள்ளப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆட்சி புரியும் பா.ச.க. அரசின் தவறான நிலைப்பாட்டிற்கு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பாக அமைந்துள்ளது. அதுபோலவே இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி உண்பதும் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் இயற்றப்பட்டது. சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரம் படைத்த அவையாக மாநில சட்டமன்றங்கள் விளங்கினாலும் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலக் கூறாக விளங்கும் தனிமனித உரிமைகளை உணர்வுகளை பறிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதை மும்பை உயர் நீதி மன்றத்தின் அண்மைக்கால தீர்ப்பு விளக்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்கள் தனிமனிதர்களின் படுக்கை அறை, சமையல் அறை வரைச் சென்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் விருப்பங்களையும் தீர்மானிக்கும் அளவு செல்லக் கூடாது என்பதை அறுதியிட்டு மும்பை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் ஓகா மற்றும் சுரேசு குப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேற்கண்ட தீர்ப்பில் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விளக்கங்கள் சிந்தனைக்குரிய ஒன்றாகும். இந்திய நாட்டில் வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் மாட்டிறைச்சி உண்பதும் உற்பத்தி செய்வதற்கும் தடையில்லை. அது போலவே மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட்டிருந்தாலும் மாட்டிறைச்சி உண்பதற்கு தடையில்லை. உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆய்வுக்காகவும் நோய் வாய்ப்பட்ட விலங்குகளையும் கொல்வதற்கு தடையில்லை. இவ்வாறாக இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பண்பாட்டு வழியிலும் உணவு, உடை போன்றவற்றிலும் வேறுபாடான விடயங்களை உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் இயங்குகின்ற அரசமைப்புச் சட்டத்தை தன்னுடைய சித்தாந்தங்களுக்கு ஒப்ப அரசியல் சக்திகள் வளைந்திட முயல்வதோ, முரணான முடிவுகளை மேற்கொள்ள முயற்சிப்பதோ நாட்டின் ஒற்றுமையை கேள்விக்குரியாக்கி விடும் என விளக்கியுள்ளனர். தனிமனித உரிமைகள், பாதுகாப்பு, பண்பாட்டு சூழல் என்பவைகளை எந்த அரசியல் கட்சியும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை மும்பை உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் சுட்டிக் காட்டியிருப்பதை உணர்ந்து தன் பாதையினை சரிசெய்து கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இன ஒடுக்கல்களும் மொழித் திணிப்புகளும் பண்பாட்டுத் திணிப்புகளும் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் தன்னலத் தலைமைகள் சிலவும் இவற்றை வலிந்திழுத்து நிலைநிறுத்துவதும் ஏற்கப்பட்ட எல்லைக் கோடுகளை மீற நினைப்பதும் இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் போக்கு என்பதை குறிப்பாக ஆள்வோர் உணர வேண்டும். நீதியின் குரல் நிலை பெறட்டும்; மாந்த நேயமும் மானுடப் பற்றும் மலரட்டும். சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (திருக்குறள்: 986) – திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefவைகாசி – 2047(மே – 2016)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி