14 February 2014 5:09 am
இது தேர்தல் காலம். நாட்டிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தத்தம் வாக்கு வங்கியை எவ்வாறு பலப்படுத்துவது, எந்தெந்த கட்சிகளுடன் சேர்ந்தால் மீண்டும் நம் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள இயலும் என்பன போன்ற சிந்தனைகளை மட்டுமே முன்னிறுத்தி தன் கொள்கை, கோட்பாடு, நாட்டு நன்மை, நேர்மை, வளர்ச்சி போன்றவைகளை முற்றாகப் புறந்தள்ளி ஒருவருக்கொருவர் கமுக்கமாய்ப் பேசிக் கொள்ளும் காலம் இது. தேர்தலுக்கு முந்தைய ஆறுமாத காலம் நாட்டில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் எழுந்தாலும் அவைகள் இவர்கள் மீது எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பது கடந்த கால வரலாற்று நிருபணங்களாகும். 2009 தேர்தல் காலத்தில் தமிழினம் சந்தித்த பேரிழப்பே ஒரு சரியான உதாரணமாகும். இந்திய அளவில் வறுமை, தரமான கல்வி, சுகாதாரம், ஊழல் ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி என பரவலாக ஒவ்வொரு தேர்தலின் போது பேசப்படுவது போல், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழச்சிக்கல், காவிரிச் சிக்கல், மீனவர் படுகொலைகள், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, அணுஉலை ஆபத்து என ஒவ்வொன்றும் அவ்வப்போது பேசப்பட்டுத் தீர்வுகளைக் காணாது அரசியல்வாதிகளுக்குத் தீனியாக மட்டுமே பயன்படுகின்ற திக்கற்றப் பயணங்களாகும். ஒவ்வொரு சிக்கலும் அவ்வப்போது அரசியல் கட்சிகளால் உரத்த குரலில் இடித்துரைக்கப்படும். ஆனால் உரலை உற்று நோக்கினால் உமி மட்டுமே தென்படும். இந்தச் சூழலில் மனித குலத்தின் இயற்கைப் பேரழிவுக்கும், செயற்கைப் பேரழிவுக்கும் காரணமாக விளங்கும் அணுஉலைகள் குறித்து கவலையுடன் அணுக வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஏன் இன்றும் கூட தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஒரு பெரும் இருட்டு மின்வெட்டு என்பதாகும். இதிலிருந்து மீள்வதற்கு கிடைத்த கற்பகத்தரு கூடங்குளம் அணுமின் உற்பத்தி என்பது அரசு குறிப்பாக நடுவணரசு மற்றும் சில அறிவியலாளர்களின் வாதம் ஆகும். இது ஒருபுறமிருக்க, அல்ல; அல்ல, அணுமின் உற்பத்தி என்பது இயற்கை மற்றும் மனித குல அழிவிற்கான ஆணிவேர் என்கிற வாதம் மறுபுறம். இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இடிந்தகரை அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள தமிழ் மக்கள், தங்களின் உயிர்காப்புக்காக வேண்டி, பல்லாண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த மூன்றாண்டுகளாக அணுசக்திக் கெதிரான மக்கள் இயக்கம் திரு உதயகுமார் தலைமையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கட்சிகள் இவர்களை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டன. ஆனால் தற்போது தேர்தல் காலமாகையால் அடங்கி, ஒடுங்கி தங்களின் முன்னுரிமைகளை மாற்றிக் கொண்டுள்ளன. மதில் மேல் பூனை போன்று இருந்த சில கட்சிகள் கூட, ஆபத்துகள் உண்டெனினும் பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள அணுஉலையை இனி மூடுவது என்பது பெரும் பொருளாதார இழப்பு அல்லவா? என்ற அளவில் தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. கட்டி முடிக்கப்பட்ட அணுஉலை குறித்து கருத்து தெரிவித்தவர்கள் பலர் கட்டவிருக்கின்ற மூன்றாவது நான்காவது அணுமின் உலை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது அவர்களின் அறியாமையை பறை சாற்றுவதாக உள்ளது. இந்தியாவின் அணுமின் சக்தி குறித்த கொள்கை என்பது இந்தியாவின் வளங்கள், அறிவியல், அறவியல் அடிப்படைகளை முன் வைத்து வகுக்கப்பட்டதல்ல. மாறாக ஜப்பான், ரசியா, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளின் அரசியல், வணிகம் சம்மந்தப்பட்ட ஒன்றாகும். அணுசக்தித் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யக்கூடிய திறமை படைத்த நிலையில் இருக்கும். மேற்கண்ட நாடுகளின் திட்டம் அணுமின் நிலையங்களையும், அதன் செய்கருவிகளையும் விற்றுப் பணம் சம்பாதிப்பதுதான். 1980களில் ரசியாவிலிருந்து அணுசக்தியால் இயங்கும் நீர் முழ்கிக் கப்பல் இயக்குறுப்பு தயாரிப்பு (Submarine Propellsion System) தொழிற்சாலை வடிவமைப்பை இந்தியா வாங்க முயன்றது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு தருவதற்கு ரசியா விதித்த நிபந்தனை இந்த தொழில் நுட்பத்துடன் அணுமின் நிலையம் ஒன்றையும் வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதாகும். வேறு வழியின்றி 1988 ஆம் ஆண்டு அதன் ஆபத்துகளை உணராமல் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட அணுமின் ஆற்றலை விட்டால் வேறு கதியே இல்லை என்றிருக்கும் சில பாலை நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் மின்சக்தித் தேவையை ஈடுகட்ட அணுமின் சக்தி அத்தியாவசியமான ஒன்று என்பது போன்ற மாயை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவான ஆபத்துகள் பல அரசியல் கட்சிகளால் நியாயப்படுத்தப்படுகின்றன. இது ஒரு தவறான அரசியலாகும். கூடங்குளம் மின் உற்பத்தி துவக்கம் குறித்து இதுவரை எத்தனை தவணைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன என்பதே அந்த தொழில் நுட்பத்தில், தயாரிப்பில் தரம் குறைந்த செய்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதற்குச் சான்றாகும். இந்தியாவின் எந்த இடத்தில் நிறுவப்பட்ட அணுமின் நிலையமானாலும் அதன் 1. பாதுகாப்பு, 2. கதிரியக்க கழிவுப் பொருட்களை கையாளுதல், 3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 4. அணு விபத்து நிகழும் பட்சத்தில் அரசின் பொறுப்பு, 5. பேரழிவு நிருவாகம், 6. இழப்பீடுகள் போன்ற விடயங்கள் குறித்து ஒரு தெளிவான முடிவு எட்டாத வரையில் மேலும் அணுமின் நிலையங்களை உருவாக்குவது என்பது இயற்கை வளங்களுக்கும், மனித உயிர்களுக்கும் எதிரான ஒரு முதிர்ச்சியற்றப் போக்காகும் என்பதை அரசு உணர வேண்டும். ஜப்பான் ஃபுகுசிமா அணுஉலை விபத்துக்கு பின்னர் அணுமின் நிலையத்தைத் தூய்மைப்படுத்த குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அனைத்து அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மாற்று மின்சக்தியை நோக்கி நகர்கின்றது. உக்ரைன் நாட்டில் செர்பினோபிலில் ஏற்பட்ட அணுஉலை விபத்து நில நடுக்கத்தால் ஏற்பட்டதல்ல. மாறாக மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று. எனவே அணுமின் நிலையங்களால் பெறப்படும் மின்சாரம், திட்டச் செலவு, பயன்பாடு ஆகியவற்றுடன் அவைகளின் விளைவாக நாட்டில் ஏற்படும் ஆபத்து, பேரழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் இவைகளை ஒப்பு நோக்கி ஆய்வு செய்கையில் ஒன்று தெளிவாகும். நாட்டுத் தேவையின் மின்சார உற்பத்தியில் மூன்றே விழுக்காடு பங்களிப்பு செய்யும் அணுமின் ஆற்றலுக்கு இந்திய மண்ணும், மக்களும், கடலும், கடல் சார்ந்த மக்களும் கொடுக்கும் விலை மிகப் பெரியது என்பதை தெள்ளத் தெளிவாக உணரலாம். எனவே, எந்த வழியில் பார்த்தாலும் அணுமின் உலை என்பது பாதுகாப்பானதோ, தூய்மையானதோ, மலிவானதோ அல்ல. இந்தியா இனியும் அணுமின் நிலையங்கள் அமைப்பதை குறிப்பாக கூடங்குளம் 3 மற்றும் 4வது அலகுகள் கட்டப்படுவதை முற்றாகக் கைவிடுவதே நாட்டுக்கு நன்மை பயக்கும் செயலாகும் என்பது வரலாற்று ஆவணங்களின் வெளிப்பாடாகும். வருமுன் காப்பதை உறுதி செய்யும் வகையில் அரசும், அரசியல் கட்சிகளும் இது குறித்து கருத்து தெரிவித்திருப்பது ஒரு சனநாயகக் கடமையாகும் என்பதையும் நினைவூட்டுகின்றோம். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (குறள்: 435) கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor in Chiefமாசி – 2045(பிப்ரவரி – 2014)