11 March 2018 11:00 am
வாழ்க்கைப் பயணத்தில் நாம் கடந்து செல்கின்ற ஒவ்வொரு மணித்துளிகள் அல்லது நம்மைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு மணித்துளிகளும் விலை மதிப்பற்றவை. அவையனைத்தும் உயிரினும் மேலானவைகளாகும். அது போலவே சிந்திக்க இயலும் ஒரு விலங்கினப் பிரிவான மனிதன் உழைப்பும் அதற்காகப் பயன்படுத்தப்படும் காலமும் உலக வரலாற்றில் பல உண்மைகளையும் அறிவியல் மாற்றங்களையும் விதைத்து மனித இனத்தின் குமுகாயப் பிணைப்பை மேலோங்கச் செய்துள்ளன. காலமும் உழைப்பும் கனிநிகர் இனிமையை மாந்தருக்கு தருவதாக அமைவதே இயல்பான ஒன்றாகும். எனினும் கடந்துப் போன ஓர் ஆண்டின் கால அளவையில் தமிழ் நாட்டு மக்கள் நுகர்ந்த இனிமைகளை விட இழப்புகளே மிகுதி என்ற அளவில் தான் வரலாற்றின் பதிவாக நம் கண்முன்னே காட்சியளிக்கின்றது. 2017 ஆம் ஆண்டு பல்வேறு சோக நிகழ்வுகளையே தமிழ்நாட்டில் பதித்துத் தாண்டிச் சென்றுள்ளது. அவைகளை வரிசைப் படுத்துகையில் கீழ்க்கண்டவைகளை மறைத்து விட இயலாது. 1. தமிழ்நாட்டுத் தொன்மை உணர்வாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் போற்றப்பட்ட சல்லிக்கட்டு நிகழ்வுக்கு ஏற்படுத்தப் பட்டத் தடை; அதை தற்காலிகமாக உடைத்தெறிந்த மக்களின் மெரினாப் போராட்டம்.2. தமிழ் நாட்டு அரசியல் அரங்கில் ஆளுமை மிக்க அரசியல் தலைவர்கள் கலைஞர் மு.கருணாநிதி, செல்வி செ.செயலலிதா ஆகிய இருவரில் ஒருவர் உடல் இயலாமையாலும் மற்றொருவர் நோய்வாய்ப்பட்டு இறப்பினாலும் அரசியல் அரங்கிலிருந்து விடை பெற்று விட்டனர். இது தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் ஒரு புதிய நகர்வுகளுக்கு இடமளித்துள்ளது.3. தமிழக மக்கள் பலரைத் தடுமாற்றத்திற்கு உட்படுத்திய மது; அந்த மதுவின் போதையில் மதிமயங்கி தன்னிலை, நன்னிலை மறந்து குடும்பங்களைத் தவிக்க விடும் இழிநிலைத் தன்மைக்கு எதிராக எழுந்த பெண்களின் சினம் தாங்கிய மதுக்கடை அழித்தொழிப்புப் போராட்டம்.4. சமுக நீதிக் கோட்பாட்டின் கூடாரமாகவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தமிழ்நாட்டில் படிநிலை சமுக அமைப்பின் அடிநிலை மாணவர்களும் சிந்தனைத்திறனிலும் கல்வியிலும் உயர்நிலை எட்ட இயலும் என்ற உண்மையை உலகிற்குப் பறைசாற்றிய அரியலூர் மாணவி செல்வி அனிதா. அந்த அனிதாவின் மருத்துவப்படிப்பிற்கானக் கனவுகளைச் சிதைக்கும் வகையில் கொணரப்பட்ட நடுவணரசின் நயவஞ்சகக் கொள்கையான நீட் நுழைவுத் தேர்வு. அதன் கரணியமாக உயிரையே மாய்த்துத் தன் உணர்வை பறைசாற்றிய செல்வி அனிதாவின் இறப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்.5. வேளாண்மை விளைநிலங்களில் இயற்கை எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டு நில இழப்பையும் நிலத்தடி நீரையும் மாசுபடச்செய்த மத்திய அரசின் கொள்கையை எதிர்த்துத் தொடர்ப் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட நெடுவாசல் மக்கள் எழுச்சி.6. காலங்காலமாகப் பேசப்பட்டும் உச்ச நயன்மை மன்ற தீர்ப்புகள் பெறப்பட்ட நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயங்கும் நடுவணரசின் போக்கு மற்றும் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு நயன்மை விலை கோரி பல மாதங்களாக இந்தியத்துணைக்கண்டத் தலைநகரில் தமிழக விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்கள்.7. குமுகாயக் கேடுகளில் ஒன்றான கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளான ஓர் குடும்பம் தன் பச்சிளம் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தங்களைத் தாங்களே நெருப்பிலே கருக்கிக் கொண்ட சோகம். 8. மீத்தேன் திட்ட எதிர்ப்பைக் காட்ட தமிழ் நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கைதுகள்.9. தமிழ் நாட்டு அரசியல், கலை, கல்வி, கவிதைத் தளங்களில் ஆளுமை மிக்கவர்களாகத் திகழ்ந்த இரா.செழியன், கவிக்கோ அப்துல் இரகுமான், கவிஞர் நா. காமராசன், தமிழறிஞர் நன்னன் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், மேலாண்மைப் பொன்னுச்சாமி ஆகியோரின் இறப்புகள்.10. இராசீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி சிறைப்பட்டிருக்கும் பேரறிவாளன் விடுவிப்பிற்காக அவருடைய தாயாரும் தமிழக மக்களும் எடுத்து வரும் முயற்சிகள். 11. இந்தியாவின் தென்முனையில் இருபுறமும் கடலால் சூழப்பட்டு கடலைத் தன் தாய்மடியாகக் கொண்டு உழைத்து வரும் மீனவ மக்கள் ‘ஒக்கி’ என்று பெயரிடப்பட்ட புயலால் சிக்குண்டு பொருளாதார நிலை சீரழிப்பு மட்டுமின்றி கடலுக்குள் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாண்டு போன நிகழ்வுகள். மக்களைப் பறி கொடுத்த மீனவத் தாய்மார்களின் அழுகுரல் ஓலம். கடந்து போன 2017 ஆம் ஆண்டில் எம் நெஞ்சைத் தொட்டு எம்மை வருத்திய நிகழ்வுகளாக மேற்குறிப்பிட்டவைகளைக் காண்கிறோம். இவைகளில் தமிழ் நாட்டு மக்களின் மாணவர்களின் நேரமும் உழைப்பும் உணர்வும் செலவழிக்கப் பட்டிருந்தாலும் எந்த சிக்கலுக்கும் தீர்வும் நேர்மையும் எட்டப்படவில்லையே என்பது தான் கடந்த ஆண்டின் வேதனை மிகுந்த வரலாறு ஆகும். தமிழரின் போராட்டங்களுக்கு விடையோ, வெளிச்சமோ, விளைச்சலோ கிட்டவில்லை.இந்தத் தோல்விகளுக்கும், தொய்வுகளுக்கும் எவை காரணமாக அமைந்துள்ளன என்பதை ஒவ்வொரு தமிழரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அரசியல் தளத்தில் நடுவணரசின் போக்கு அனைத்து விடயங்களிலும் தமிழர் நலனுக்கு எதிராகவேத் தென்படுகிறது. தட்டிக் கேட்கவும் கட்டிக் காக்கவும் முனைய வேண்டிய தமிழ்நாடு அரசு தன் கட்சி ஆட்சியின் பதவிகளைத் தற்காத்துக் கொள்ள எந்த இழி செயலுக்கும் அணியமாக உள்ளது என்ற மறைமுகமான உண்மையும் உணரப்படுகிறது.உள்ள உறுதியும் சிந்தனைத் தெளிவும் இருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஆனால் இன்றைய தமிழ்நாட்டில் இவை இரண்டுமே பஞ்சமாகிப் போய்விட்டது.ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்தின் இருளகற்றி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என ஒளி பரப்பி, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என முழங்கி எதிரிகளை இறுமாப்புடன் போர்முனையில் எதிர்கொண்டத் தன்னிகரில்லாத் தமிழ்நிலம் இன்று தாழ்நிலையில், தடம் மாறி சீழ் நிலையிலும் கீழ்நிலையில் பய உணர்வுடன் பயணிக்கும் நிலையை எம்மால் உணர முடிகின்றது. பொய்யும் வழுவும், பொருள்நிலை மோகமும் பேணும் தலைமைகளால் தமிழர் உணர்வில் நஞ்சாய் கலந்து தமிழின் நலம் கெடுக்கும் ஊணாய் மாற்றம் பெற்றுள்ளது.உயர்நோக்கும் இனப்பற்றும் உயிராய்க் கொண்டு நெஞ்சத்தில் தெளிவும் நேர்மையின் நெறியறிந்து சிறிதேனும் தன்னலம் பாராத் தலைவர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாடு; தீய செயல் வடக்கு வந்து செப்பினாலும் சிறிதேனும் ஒப்பாமல் தமிழ் மொழி நலன், தமிழ் மக்கள் நலன் போற்றி ஆட்சி புரிந்த தலைவர்களைப் பெற்றிருந்தத் தமிழ்நாடு இன்று சந்தி சிரிக்க மாற்றம் பெற்றது ஏன்?சிந்தனை வளராத நாட்டில் செயல்திட்டம் இராது என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?சாதி மதம் பொருள் வழிப்போற்றி சிந்தை சீரழிந்து மொந்தையில் மூழ்கி சந்தையில் நிற்கும் மந்தை விலங்குகளாய் கந்தலாகித் தமிழ்நாடு காட்சியளிக்கிறது ஏன்?இதனையெல்லாம் இங்கு எடுத்துரைக்க காரணம் தமிழினம் விழிப்புற வேண்டும் என்பதற்காகவேயாகும். விடியும்போது விடியட்டும் என ஊதப்படும் சங்குபோல இடித்துரைப்பது எம் கடமை என்ற உணர்வும் வரம்பிற்குட்பட்ட இவ்வையக வாழ்வில் இதுவரையில் எப்படியிருந்தாலும் இனி இருக்கின்ற காலம் வரை ஏற்றதைச் செய்ய வேண்டாமா?நலிவு எது? நலம் எது? எனத் தெரிந்து செயல்படுவதற்கு இப்புத்தாண்டு வழிவகுக்கட்டும். நற்றமிழ்க் குமுகாய நலனை முன்னிருத்தும் ‘நாம்’ ‘நமது’ எனும் நன்னெஞ்சங்கள் பெருக வேண்டும். மொய் சிதைக்கும் ஒற்றுமையின்மை புறந்தள்ளப்பட்டு, கறந்த பாலின் சுவை சிதைக்கும் கலமாக இல்லாமல், குலம் சிதைக்கும் குணமுடையோரிடம் கூடிக் களிக்காமல் தெளிந்த விரிந்த பார்வையுடன் சீர்மிகு இளைஞர்கள் தங்கள் சிந்தனையை சீராக்க வேண்டும். தெளிந்த மனதுடன் மாற்றத்திற்கான விதையை ஊன்றுக! நாற்றை நடுக! நல்வினை செய்க!விழிப்பும் விடியலும் செழிப்பும் சீறும் தரும் ஆண்டாகத் தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும்!துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை (திருக்குறள்: 669 – திருவள்ளுவர்)கனிவுடன் சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்