அடித்தளமின்றி கோபுரமா? - தமிழ் இலெமுரியா

16 July 2013 4:44 pm

Tower

உலக நாடுகள் பலவற்றில் எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றது. இதில் பொதுவாகவே நிறம், மதம், பொருளாதாரம், வல்லாண்மை, கல்வி, மண் வளம், மன வளம் போன்ற காரணிகள் அடிப்படையாக அமைந்துள்ளன. எனினும் காலவோட்டத்தில் இவைகள் இடம் மாறும் போது சில நாடுகள் வளர்ச்சியையும், சில நாடுகள் வீழ்ச்சியையும் சந்திப்பது என்பது சாத்தியமாகிறது. இது போன்ற ஏற்றத் தாழ்வுகள் அந்தந்த நாட்டு மக்களை தேசிய உணர்வுடன் எதையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையைப் பெறும் தன்மையுள்ளவர்களாக மாற்றம் பெறச் செய்கிறது. 

இந்திய நாட்டைப் பொறுத்த வரையில், உலகின் பிற நாடுகளில் அறியப்படாததும், உலக அளவில் இந்திய நாட்டை ஒரு தவறான வெளிச்சத்தில் காட்டக் கூடிய தன்மையுடையதாகவும், நம்மை விட அறிவியல், பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் கூட ஓர் இழிவான பார்வையை நம் மீது செலுத்தும் வண்ணமுமாக அமைந்திருப்பதும் நம் நாட்டில் இன்றளவும் பேணப்படும் “சாதியம்” என்னும் அவலமாகும். ஒரு காலத்தில் கல்லாமையும், போதிய அளவு பண்பு இல்லாமையும் காலந்தோறும் சாதிப் பிரிவினைக் கூறுகளை வளர்த்து வந்தாலும், இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்பு கல்வி, பொருளாதாரத் தளத்தில் நாம் கண்டிருக்கும் ஏற்றம் இந்தச் சாதிய அவலத்தை முற்றிலுமாக நீக்கி உலக அரங்கில் நம்மை பீடு நடைப் போட வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து மகிழ்ந்து வரும் ஆதிக்க சக்திகள் தங்களின்  சுகமான வாழ்வை சாதியத்தின் பெயரால் நிலைப்படுத்தவே விரும்புகின்றன. எனவே, பாமரத் தன்மை, பிறவி இழிவு, அடிமைத் தனமான உடல் உழைப்பு என்பன இன்றும் பட்டியலின மக்களின் விதி என்றளவில் நிலைப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றை அறவே ஒழித்து இந்தியாவின் இந்தப் படிநிலை அமைப்பைச் சமன் செய்ய வேண்டிய இந்திய அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் கூட தற்போது சமூக பிற்போக்குத் தனத்தை ஊக்குவிக்கும் சாதியக் கட்டமைப்பை, சாதிய உணர்வினைத் தாங்கிப் பிடிக்கும் வெட்கக் கேடான நிலைக்குத் தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். 

ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின் ஒரு சாதி இருக்கிறது எனச் சொல்லும் அளவிற்கு இங்கே சமூக நேர்மை அய்யத்திற்கு இடமளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்திய அளவில் மகாத்மா புலே, அண்ணல் அம்பேத்கர், நாராயண குரு, இராசாராம் மோகன்ராய், மங்கத்ராம், குருதாசு, மைக்கேல் மது சூதனன் தாசு, இராம்தேவ் பந்த், நேவல் தரம், தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகளார், அயோத்தி தாசர், தந்தை பெரியார் போன்றோர்களின் கருத்தியல்புகளும், போராட்டங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டச் செய்திருந்தாலும், அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி அமைப்பு நீடிக்க வேண்டும் என்று விரும்புவது எவ்வாறு நியாயமாகும்? 

சாதிகள் தமிழ் மக்களிடையே கூட்ட உணர்வை வளர்த்த அளவிற்கு கூட்டு உணர்வை வளர்க்க வில்லை. தற்போது இவைகள் நடுநிலையான மக்களைக் கூட அவரவர் சாதிகளின் பக்கம் ஈர்க்கும் அளவிற்கு வலிமை பெற்று ஒரு ஆழமான வன்மைப் போக்கை விதைத்து வருகின்றன.

கடுமையான அலைச்சலின்றி, பிரச்சாரங்கள் இன்றி, பொருட் செலவின்றி, அறிவார்ந்த சிந்தனையின்றி இலகுவாக பெரும் கூட்டமும், விளம்பரமும் சாதிப் போதையில் இருக்கும் கூட்டத்தினரின் வெற்று உணர்வுகளைச் சற்றே தூண்டி விடுவதன் மூலம் கிடைக்கும் பொழுது பல தலைவர்களை தன்னிலை இழக்கச் செய்துள்ளது. மேலும் இது சாதிய வாக்கு வங்கி அரசியலுக்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதியக் கலவரங்கள் இதையே உணர்த்துகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபது பட்டியலின மக்களின் உயிரும் உடமைகளும் ஆகும். கலவரங்கள் உணர்ச்சி மேலீட்டால் உருவாகும் போது அங்கு மனிதப் பண்புகளும், நேர்மையும் விடைபெற்று வெறியும், விலங்காண்டித் தனமும் உயிர் பெறுவதால் பொதுச் சொத்துகள் நாசம் செய்யப்படுவதும், சமூக வித்தியாசமின்றி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் நம் தமிழ் நாட்டுக்கு பெரும் இழப்பும், இழுக்கும் ஆகும். இதில் விதிவிலக்காக நாம் எந்தக் கட்சியையும் சுட்டிக் காட்ட இயலவில்லை.

உலகிற்கே பண்பாட்டையும், நாகரிகத்தையும் விதைத்த தமிழ் மண்ணிற்கு இது போன்ற மாற்றங்கள் பெரும் தலை குனிவாகும். ஒரு புறம் இந்தியத் தேசியம் பேசுகின்றோம்; தமிழ் தேசியம் பேசுகின்றோம்; மறுபுறம் சாதி அடையாளத்தை முன் நிறுத்துகின்றோம். இவை ஒன்றுக்கொன்று முரணானவை. சாதியம் ஒழிந்தால்தான் மொழி வழி, இன வழி, நாட்டு வழி தேசியம் மலருமேயொழிய, தமிழ்த் தேசியம், இந்தியத் தேசியம் எனும் வெற்று உரைகளால் ஒற்றுமை உணர்வை புதுப்பித்தலில் வெற்றி பெற முடியாது. ஒவ்வொருவரும் உள்ளத்திலும், உணர்விலும், உதிரத்திலும் சாதிய உணர்வைத் தக்க வைத்துக் கொண்டு சமனியம் பேசுவது, தமிழ்த் தேசியம் பேசுவது என்பது நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்ற கயமைத் தனமேயொழிய வேறில்லை. 

அடித்தளமே சரியில்லாமல் அப்புறம் எப்படி மாடமும், மாளிகையும், கூடமும், கோபுரமும் எழுப்ப முடியும்? தூய்மையும், துணிவும், தொண்டும் துலங்கும் வாய்மையான நெஞ்சங்கள் பல்கிப் பெருகி பணியாற்ற முன் வரும் போதுதான் மாற்றம் பிறக்கும். அவ்வாறின்றி வஞ்சக நெஞ்சங்களில் வாய்வீச்சுடன் கூடிய வறட்டு செயல்களே தொடருமாயின் வேதனையே மிஞ்சும். வெறுமையே எஞ்சும். ஓரினத்தின் எழுச்சி என்பதும், மறுமலர்ச்சி என்பதும் அவ்வினத்தின் விழிப்புணர்ச்சியையும், செயல்பாட்டினையும் பொறுத்தே அமையும். அது விதைக்கப் படாமல் தானாக வளர்வது அன்று. எனவே தமிழர்கள் குறிப்பாக, இளையத் தலைமுறையினர் தெளிவான அரசியல், சமூகப் பொருளாதாரப் பார்வையுடன், சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாத நல்லறிவாளர்கள் துணையுடன், துணிவுடன் நாடு நலம் பெற நல்வழியைக் கண்டாக வேண்டும். இதுவே நம் தமிழ்நாட்டின் இன்றைய தேவையும், சேவையும் ஆகும். 

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.          
(குறள்: 954)

கனிவுடன்
சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்.

(வைகாசி 2013)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி