4 December 2013 12:10 am
கடந்த வருடம் பதவியேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், நாட்டில் நிலவிய அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் மற்றும் ஊதாரித்தனம் குறித்து களை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக அரசு விழாக்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும், வரவேற்பு விழாக்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் தங்களின் அர்த்தமற்ற பேச்சுகளைக் கைவிட வேண்டும் என்றும் ஜின்பிங் உத்தரவிட்டார். மேலும், அதிகார வர்க்கம் இன்னும் திறமையாக செயல்பட்டு ஊழல் குறைய வேண்டும் என்பதற்காக அரசு அலுவலகங்களில் சிவப்பு நாடா முறையையும் அவர் குறைத்தார். அதிபரின் பொதுவுடைமைக் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து ஆய்வு செய்யும் மத்தியக் குழு இந்த விதிமுறைகளை மீறிய அதிகாரிகளுக்கு அலுவலக அளவிலோ அல்லது உள்கட்சி அளவிலோ தண்டனைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால் தண்டனை பெற்றவர்களின் விபரங்களை அரசு வெளியிடவில்லை. ஆனால், இணையத்தள தகவல் ஒன்றில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களது அலுவலக கார்களை பயன்படுத்தியதிலும், 903 அதிகாரிகள் விரிவான கொண்டாட்ட விழாக்களை ஏற்பாடு செய்ததிலும் விதிமுறைகளை மீறியதாக இந்தக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்ற ஆண்டு மட்டும் ஆடம்பரமாகவும், விழாக்கள் குறித்த விதிமுறைகளை மீறியதற்காகவும் கிட்டத்தட்ட 20,000 அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.