இந்தியாவில் உயர்நீதிபதிகளின் நியமன முறை மாறுகிறது - தமிழ் இலெமுரியா

16 August 2014 7:03 am

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளை உள்ளடக்கிய குழு நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளை வழங்கி வரும் முறையை மாற்றி அமைக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சட்டமுன்வரைவு தற்போது மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த புதிய சட்டமுன்வரைவுக்கு காங்கிரஸ் கட்சி வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது, மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் போராடி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம், நீதிபதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.அரசு விளக்கம் இந்த புதிய சட்டமுன்வரைவின் மூலம் முறையான நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் தான் மத்திய அரசு முயன்று வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் குறிப்பிட்டார். புதிய சட்டவரைவின்படி இந்தியாவில் கடந்த 1993-ல் நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பின்பற்றப்படும், நீதிபதிகளை நீதிபதிகளே பதவி நியமனம் செய்யும் முறை முழுவதுமாக ஒழிக்கப்படும். இதனையடுத்து இனி நீதிபதிகள் நியமனத்திற்கு புதியதாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆணையத் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்படுவார். மொத்தமாக 6 பேரை உள்ளடக்கிய இந்த ஆணையத்தில் தலைமை நீதிபதியை தவிர, 2 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மத்திய சட்டத்துறை அமைச்சரும் இடம்பெறுவார்கள். இவர்களோடு 2 முக்கியஸ்தர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்படும் 2 பிரபல முக்கியஸ்தர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேர்ந்தெடுக்கப்படும் அந்த இருவரில் ஒருவர் கண்டிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் இந்த புதிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட, அரசியலமைப்புச் சட்டத்தில் 121 பிரிவில் திருத்தம் செய்யும் சட்டமுன்வரைவும் இந்திய மக்களவையில் நிறைவேறியது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி