12 March 2014 5:27 am
தேவயானி கோப்ரகடே விவகாரத்தால் இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு உறவினையும் மீண்டும் வலுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் புதிய இந்திய தூதரை வரவேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்குபெற்ற அதிபர் ஒபாமா தூதரை வரவேற்றார். அவரது பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். புதிய தூதரான ஜெய்சங்கர் இதுபற்றி கூறுகையில், இருநாட்டு உறவிற்கு முக்கிய தூண்களாக இருக்கும், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு உறவுகள், மற்றும் உலக பிரச்சினைகளில் ஒபாமா தனது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.