21 September 2015 10:21 am
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா தனது 75 ஆவது வயதில்கொல்கத்தாவில் ஞாயிறு மாலை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். காலஞ்கென்ற டால்மியா கடந்த 36 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் பதவிகளில் இருந்துள்ளார். கடந்த 1983 முதல் அவர் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருந்த போது, 1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளை இந்தியா நடத்த முக்கியப் பங்காற்றினார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இரண்டாவது முறையாக டால்மியா பொறுப்பேற்றிருந்தார். விளையாட்டுத் துறை நிர்வாகிகளில் மிகுந்த ஆளுமை செலுத்திய ஒருவராக அவர் இருந்தார் என மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளார். அவரது மறைவு குறித்து சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்கூலி உட்பட பல கிரிக்கெட் பிரமுகர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.