இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி சாக்கோ அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று தி.மு.க - தமிழ் இலெமுரியா

29 September 2013 12:21 am

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சாக்கோவால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையின் வரைவு நகல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27,2013) குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாக சாக்கோ அறிவித்திருந்தார். தமது வரைவு அறிக்கைக்கு ஆதரவாக குழுவின் உறுப்பினர்கள் 16 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்ததாக சாக்கோ அறிவித்திருந்தார். இந்த வரைவு அறிக்கையில், 2ஜி விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசா மட்டுமே பொறுப்பு என்றும், பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப் பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. அதேசமயம், சாக்கோ தயாரித்திருக்கும் வரைவு அறிக்கையுடன் இடதுசாரிக் கட்சிகள் இரண்டும், அ.தி.மு.கவும், தி.மு.கவும் உடன்படவில்லை. இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியவர்களின் பங்கு என்ன என்பது குறித்து முறையாக ஆராயப்படவில்லை என்பது இந்த கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. குறிப்பாக, சாக்கோவால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஆ. ராசா சார்ந்திருக்கும் தி.மு.க, சாக்கோவின் அறிக்கை முழுமையானதல்ல என்றும், முறையானதல்ல என்றும் தெரிவித்துள்ளது. தி.மு.கவின் சார்பில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, சாக்கோவின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று தெரிவித்தார். சாக்கோவால் பிரதானமாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ராசா நேரில் வந்து இந்த குழுவில் சாட்சியமளிக்க விரும்பி மீண்டும் மீண்டும் கடிதம் எழுதியும் அவருக்கு அந்த வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறிய டி.ஆர்.பாலு, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நீதிமன்றங்களில் அளித்திருக்கும் வாக்குமூலங்களின் நகல்களை தாம் கேட்டும் அவற்றை சாக்கோ அளிக்க மறுத்ததாகவும், அவற்றை ஆராயவேண்டும் என்கிற தமது கோரிக்கையையும் சாக்கோ ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எனவே அவசர கதியில் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட சாக்கோவின் அறிக்கைக்கு முரணான தமது கருத்துக்களை தாம் அடுத்த வாரம் சாக்கோவிடம் அளிக்கப் போவதாக பாலு தெரிவித்தார். சாக்கோவின் அறிக்கையுடன், இது தொடர்பாக ராசா அளித்திருக்கும் 108 பக்க தன்னிலை விளக்கமும், இதில் தி.மு.க சார்பில் அளிக்கப்பட விருக்கும் விமர்சன அறிக்கையும் சேர்த்து பொதுமக்களிடம் வைக்கப்படும்போது இதன் முழுமையான விவரங்கள் வெளியாகும் என்றும் பாலு தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி