16 September 2015 11:09 am
இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரமானது, பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை கடுமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்புத் தூதர் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசு நாட்டின் நிலைமையை சரியாகக் கையாண்டால், அது அந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அளவில் எப்படி நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமையும் என்று ஐ.நாவின் மனித உரிமைகள் வல்லுநர் பாப்லோ டெ கெரெய்ப் வலியுறுத்தியுள்ளார். கொலம்பியாவைச் சேர்ந்த பாப்லோ டெ க்ரீஃப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நீதித்துறையில் மாறுதல்களைக் கொண்டுவந்து, போருக்கு பின்னரான காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் மனதில் கொண்டு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் நோக்கில், அதற்கேற்ற வகையில் உத்திகள் வகுக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவரது அறிக்கை கூறுகிறது."சமாந்திர நடவடிக்கை தேவை"அதேபோல் உண்மைகளை கண்டறிய சுயாதீனமான வழிமுறை ஏற்படுத்தப்பட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான வகையில் நியாயங்கள் வழங்கப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என பாப்லோ டெ கெரெய்ப் கூறியுள்ளார். இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை தனது முழுமையான வலிமையை உணர்ந்துகொள்ள முடியும் எனவும் அவரது அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையின் அனைத்து சமூக மக்களிடமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அவர்களும் உள்வாங்கப்படுவது மிகவும் அவசியம் என பாப்லோ கூறுகிறார்."மீண்டும் தவறுகள் இடம்பெறக் கூடாது"அனைத்திலும் முக்கியமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரிய அளவிலான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம் எனக் கூறும் அவர், அதிகாரிகள் நீண்டகால அடிப்படையில் உறுதியுடன் செயல்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மறுபுறத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெளிவுபடுத்த உடனடி நடவடிக்கை தேவை எனவும் பாப்லோ டெ க்ரீஃப் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். நாட்டின் வடக்கு-கிழக்கு பகுதியில் பெண்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களும், சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளும் முடிவுக்கு வருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கடுமையான விதிமீறல்களைச் செய்தவர்கள் நீதிமன்றத்தின் முன்னர் குற்றச்செயல்களுக்காக நிறுத்தப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடு தற்போதுள்ள நிலையில் மீண்டும் எவ்விதமான தவறுகளும் செய்யும் நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.