24 August 2013 12:15 am
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்கள் மூவரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி, இலங்கைக்கு அனுப்பும்படி இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் உடனடியாக நாடு கடத்தப் போவதாக தமிழக காவல் துறையைச் சேர்ந்த கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இம்மூவரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ வழக்குகளோ ஏதுமில்லை. இம்மூவரையும் இந்திய அரசு நாடு கடத்தினால், கொழும்பு சென்று இறங்கியதும் சிங்கள இனவெறியாளர்களால் இவர்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது. இதை அறிந்திருந்தும் இவர்களை நாடு கடத்த முடிவு செய்திருப்பது மிக வன்மையான கண்டனத்துக்குரியதும் மனித நேயத்துக்கு எதிரானதுமாகும். எனவே, உடனடியாக அகதிகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட வேண்டும். மூவரையும் நாடு கடத்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.