உடுமலைப்பேட்டை இளைஞர் கொலை தொடர்பானவர்கள் கைது என காவல்துறை தகவல் - தமிழ் இலெமுரியா

15 March 2016 11:25 pm

தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து விட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.பெரும்பாலான குற்றவாளிகள் கைதாகியுள்ளதாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது விவரங்களை உடனடியாக வெளியிடப் போவதில்லை என்றும், அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.மேலும் அவர்களின் வாக்குமூலங்களை பெறுவது, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.தமிழக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர இதே வழக்கு தொடர்புடைய வேறு சிலரை காவலில் எடுத்துள்ளதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, பலியாகியுள்ள சங்கரின் மனைவி கவுல்யாவின் தந்தை சின்னச்சாமியின் நண்பர்கள் நால்வரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.முன்னதாக நேற்று திங்களன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சின்னச்சாமி சரணடைந்தார். ஆனால் இந்தக் கொலைக்கும் சின்னசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகிறார்.சின்னச்சாமியை மார்ச் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது தொடர்பான அரசியல் கட்சிகளின் கண்டன குரல்களும் வலுப்பெற்றே வருகின்றன.முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பேச மறுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செவ்வாய்கிழமை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்றுமே காதல் திருமணத்தை எதிர்த்தது இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.தி.மு.க., காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நல கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசையே குற்றம் சாட்டி வருகின்றன.இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி