22 September 2013 12:24 am
சிரியாவில் நடந்த இரசாயனத் தாக்குதல் குறித்து விசாரித்த ஐ.நா.மன்ற விசாரணை அதிகாரிகள், பக்கசார்பான ஒருதலைப் பட்சமான அறிக்கையை தயாரித்திருப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த இரசாயனத் தாக்குதல்களை சிரிய அரசு நடத்தவில்லை என்றும், அரச எதிர்ப்பாளர்களே இதை நடத்தினார்கள் என்பதற்கு தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சிரியாவுக்கு சென்று திரும்பிய ரஷ்யாவின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் செர்கி யப்கோவ், இந்த இரசாயனத் தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சிரிய அரசு தம்மிடம் அளித்திருப்பதாகவும், அவற்றை தாம் ரஷ்ய நிபுணர்களிடம் கையளிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த குறிப்பிட்ட சம்பவத்திற்கு முன்னர் சிரிய அரச எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்ட மூன்று இரசாயனத் தாக்குதல்கள் தொடர்பான இடங்களுக்கு ஐ.நா அதிகாரிகள் செல்லவில்லை என்பது தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் ரஷ்ய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். டமாஸ்கஸ் நகருக்கு வெளியே நடந்த இரசாயனத் தாக்குதல் சம்பவத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மோசமான இரசாயனமான சரின் பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா மன்றத்தின் விசாரணை அதிகாரிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.