16 November 2013 11:40 pm
இலங்கை பொதுநல மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தமிழர்கள் வசிக்கும் யாழ்பாணம் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து நிலைமைகளை நேரில் கண்டிறிந்தார். மேலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், போர் குற்றங்கள் தொடர்பாக விரைவில் சுதந்திரமான குழு ஒன்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஐ.நா.சபையின் பன்னாட்டு விசாரணையை இலங்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்துகளை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– இலங்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இங்கு சுய அதிகாரம் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஏற்கனவே ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகவும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 30 ஆண்டுகளாக போர் நடந்தது. இவற்றை முழுமையாக விசாரிப்பதற்கு நீண்ட காலம் ஆகும். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. பல நாடுகளில் இதுபோன்ற விசாரணைகள் 40 ஆண்டுகளாகக் கூட நீடித்து வருகிறது. எங்களை மட்டும் உடனே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. 1972–ம் ஆண்டு அயர்லாந்து போராட்டத்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதுபற்றி நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். இங்கு நடந்த 30 ஆண்டு போர் காலத்தில் தினமும் மக்கள் கொல்லப்பட்டு வந்தனர். அதை நாங்கள் இப்போது நிறுத்தி இருக்கிறோம். இலங்கை இறையாண்மை உள்ள நாடு. எங்களுக்கென்று பண்பாடுகள் உள்ளன. எனவே எங்களை பற்றி யாரும் குறை சொல்ல வேண்டாம். கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம். நாங்கள் எதையும் மறைக்க விரும்பாத காரணத்தால்தான் எங்களை விமர்சிப்பவர்களையே (இங்கிலாந்து பிரதமர்) இங்கு வர விசா கொடுத்தோம். நாடெங்கும் சென்று எதிர்க்கட்சி குழுக்களை சந்திப்பதற்கும் அனுமதி அளித்தோம். இங்கு நடந்த எந்த சம்பவங்கள் ஆனாலும் சரி நாங்களே விசாரிப்போம். எந்த பன்னாட்டு விசாரணைக்கும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.