கூடங்குளத்தில் புதிய அணு உலை உள்ளிட்ட 16 ஒப்பந்தங்களில் இந்திய-ரஷ்யா கையெழுத்து - தமிழ் இலெமுரியா

16 October 2016 4:37 pm

இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை: • இந்தியாவுக்கு தேவையான எஸ் 400 ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து சுமார் 33 ஆயிரம் கோடி செலவில் பெறுதல். • இரு நாடுகளும் இணைந்து 200 காமோ ஹெலிகாப்டரை சுமார் 6.67 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்குதல்,• ஆந்திரா மற்றும் அரியானாவில் ஸ்மார்ட் நகரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் அந்த நகரங்களில் போக்குவரத்து வசதியை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் ஒப்பந்தம். • கூடங்குளம் புதிய அணு உலை குறித்த ஒப்பந்தம் • இருநாடுகள் இடையே 6.67 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம். • இந்தியாவுக்கு தேவையான கேஸ் விநியோக பைப் லைன்கள் தொடர்பாக ஆய்வு செய்தல். • இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையத்துடன் இணைந்து ரஷ்யா விண்வெளி தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துதல்.• சர்வதேச தகவல் தொடர்பு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம். • ரஷ்யாவின் நேரடி முதலீடு, தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி மூலம் முதலீட்டு நிதியம் ஒன்றை உருவாக்குதல்.• நாக்பூர் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம். •ஆயில் மற்றும் கேஸ் துறை தொடர்பான பயிற்சி மற்றும் கல்வி குறித்து ஒப்பந்தம். • எஸ்சார் ஆயில் நிறுவனத்தின் 98 சதவீத பங்குகளை ரஷ்ய நிறுவனங்கள் பெறவும் ஒப்பந்தம். இதன் மதிப்பு 10.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும். • இரு நாடுகளுக்கான வணிகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நீடித்துக் கொள்வது. • சர்வதேசம் தொடர்பான பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவது, • இந்தியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைக்கும் ரஷ்ய அறிவியல் துறைக்கும் இடையே அறிவியல் ரீதியாக நிறுவனங்கள் குறித்த ஒப்பந்தம்,மேலும், இந்நிகழ்ச்சியில் இந்தியா ரஷ்யா இடையேயான 70 ஆண்டு ராஜ்ய உறவை உறுதிப்படுத்தும் சாலை வரைபடமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி