15 February 2014 3:30 am
சப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அந்நாட்டின் இதர பகுதிகளில் பனிப்புயலால் மோசமான வானிலை நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலில் இதுவே மிகப்பெரியதாகும். பனிப்புயலுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சுமார் 30 செ.மீ அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.டோக்கியோவில் கடும் பனிப்புயல் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேற்கு ஜப்பானில் ‘ஷின்கன்சென்’ புல்லட் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 77 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதேபோல் பல்வேறு நிறுவனங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் 16,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்ற வாரம், டோக்கியோவி்ல் 27 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இது டோக்கியோவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பனிப் பொழிவாக பதிவு செய்யப்பட்டது.