சிவாஜி சிலையை அகற்ற அவகாசம் கோரிய மனு தள்ளுபடி - தமிழ் இலெமுரியா

7 November 2015 10:21 am

தமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜியின் சிலையை அகற்ற கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை தமிழக அரசு ஒரு வார காலத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜியின் நினைவாக மணி மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ள தமிழக அரசு, அதுவரை சிவாஜியின் சிலையை அது அமைந்திருக்கும் மெரீனா கடற்கரை சாலையிலேயே வைத்திருக்க அனுமதி கோரியிருந்தது. மேலும், இது தொடர்பான வாதங்கள் நடைபெற்ற போது 2-ஆண்டு காலம் வரை அவகாசம் தேவைப்படலாம் என்று தமிழக அரசு தரப்பு கூறியது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, சிலை அகற்றப்படவுள்ள காலத்தை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று 6-11-2015 அன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சிவாஜி சிலை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தான், சிலை விரைவாக அகற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அந்த உத்தரவில், கொண்டாடப்பட வேண்டியவர்களின் சிலைகளை வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைப்பது என்பது புகழ் பெற்றவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போன்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சிலை நிறுவப்பட்ட 2006 ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கும் தொடரப்பட்டது. காந்தியாவாதியான பி.என்.ஸ்ரீநிவாசன் இந்த வழக்கை அப்போது தொடுத்திருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகனான பி.நாகராஜன் மனு தாரராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில், தற்போது உச்சநீதிமன்றமும் சிலையை அகற்ற வேண்டும் எனறு கூறியுள்ளதால், சிலை விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி