22 September 2015 10:01 am
ஜாதிஇந்திய அரசின் ஆளும் கட்சியான பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்தியாவின் இட ஒதுக்கீட்டு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜாதியை அடிப்படை அலகாகக் கொண்டிருக்கும் தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை மீளாய்வு செய்வதற்காக அரசியல் தலையீடற்ற குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், அந்தக் குழுவானது இடஒதுக்கீடு யாருக்குத் தேவை என்பது குறித்தும் இன்னும் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்யவேண்டும் என்று மோகன் பக்வத் இந்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். குஜராத்தில் இருக்கும் படேல்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கோரி பெருமளவில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழ்நிலையில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மீளாய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் ஆர் எஸ் எஸின் கிளை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் வேதாந்தம் தெரிவித்தார். ஆனால் ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யும் நோக்கத்துக்காகவே ஆர் எஸ் எஸ் அமைப்பு இப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பதாக குற்றம் சாட்டுகிறார் ஜாதியரீதியிலான இட ஒதுக்கீடு தொடரவேண்டும் என்று வலியுறுத்தி வரும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த விடுதலை ராஜேந்திரன்.