13 January 2016 11:14 am
தமிழகத்தில் திருச்செந்தூர் அருகே கரை ஒதுங்கிய நூற்றுக்கும் அதிகமான திமிங்கலங்களில் இருபதுக்கும் அதிகமானவை இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12-01-2016 அன்று கரை ஒதுங்கிய குட்டைத் துடுப்புடைய பைலட் வகை திமிங்கலங்களான இவற்றில் மீதமுள்ள எண்பதுக்கும் அதிகமானவற்றை உயிர்பிழைக்கவைக்க முயற்சித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட உள்ளூர் மீனவர்களும் அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் இத்தனை திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரையொதுங்குவது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள கடல் உயிரியல் நிபுணர்கள், வங்காள விரிகுடாவில் இது போன்ற நிகழ்வு எப்போதாவது தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.