8 September 2013 3:52 am
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக் கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளன.