தமிழ்நாட்டில் தொடரும் போராட்டங்கள்; சலுகைகளை அறிவித்தது மாநில அரசு - தமிழ் இலெமுரியா

20 February 2016 12:58 pm

தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அவர்களுக்கென பல்வேறு சலுகைகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திவரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறார்கள்.அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகை குறித்து தமிழக சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் வழங்கப்படும் தொகை இருமடங்காக்கப்படுவதாகத் தெரிவித்தார்.மேலும் சத்துணவுப் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு, அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு, தமிழ்நாடு நிருவாகத் தீர்ப்பாயத்தை மீண்டும் அமைத்தல் ஆகிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக ஆராய்வதற்கு வல்லுனர் குழு அமைக்கப்படும் என ஜெயலலிதா கூறியிருக்கிறார்இருந்தபோதும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து நாளைதான் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன.அரசு ஊழியர்கள் தவிர, மாற்றுத் திறனாளிகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் போராட்டத்தைத் துவங்கிய அவர்கள் சென்னையில் உள்ள மைதானம் ஒன்றில் இருந்தபடி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் நேற்று உயிரிழந்திருக்கும் நிலையில், 3வது நாளாக இன்றும் போராட்டத்தை நடத்தவரும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளையும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென தெரிவித்தனர்.தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதியான அவினாசி பகுதிக்கு பவானி ஆற்றின் உபரி நீரை கொண்டுவரும் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளைத் துவங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கென 3 கோடியே 27 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனக் கோரி கடந்த 12 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி