17 December 2014 11:51 am
இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குரூரமான தாக்குதலை தீவிரவாதிகள் அந்த நாட்டு மக்களின் மனங்களில் நிகழ்த்தி விட்டனர். இதை பாகிஸ்தான் மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தீவிரவாதத்தின் கொடூரக் கரங்கள் தங்களது முகத்தின் மீது பலமாக அறைந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள முடியாமல் தவித்து நிற்கின்றனர். பாகிஸ்தான் வரலாற்றில் இப்படி ஒரு அரக்கத்தனமான அசுரத்தனமான தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில்லை. தெஹ்ரிக் இ பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் நேற்று பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து நடத்திய மிருகத்தனமான, ஈவு இரக்கமற்ற கொடும் தாக்குதலில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என 145 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிச்சயம் பாகி்ஸ்தான் மக்களுக்கு இது மிகப் பெரிய வேதனை நாட்கள்.. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் அதாவது மாணவ, மாணவியர்தான். நிற்க வைத்து வெறித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர். நேருக்கு நேராக அந்தப் பிஞ்சுகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருப்பதைப் பார்த்து உலகமே பதறிப் போய் நிற்கிறது. எட்டு மணி நேரம் நடந்த இந்த வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. ஆனால் இந்த தீவிரவாதிகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பல காலங்களுக்கு பாகிஸ்தான் மக்களின் மனதிலிருந்து அகலாது. பெற்றோர் கதறல்… இந்த கொடூரத் தாக்குதலில் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள் கதறித் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தாஹிர் அலி என்பவர் கதறி அழுதபடி கூறுகையில், காலையில் எனது மகன் சீருடையில் பள்ளிக்குச் சென்றான். இப்போது சவப்பெட்டியில் அவனைப் போட்டிருக்கிறார்கள். எனது மகன்தான் எனது கனவாக இருந்தான். அந்தக் கனவை இன்று தகர்த்து விட்டனர் என்றார் கதறியபடி. இவரது மகனுக்கு வயது 14தான். சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சில மாணவர்கள் கூறுகையில், எங்களைப் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுச் சென்றபோது வழியெங்கும் எங்களுடன் படித்தவர்களின் உடல்களைப் பார்த்தோம். பள்ளிக்கூடம் முழுவதும் உடல்களாக கிடந்தது என்று பீதி அகலாத முகத்துடன் கூறினர். ஒரு மாணவன் கூறுகையில், நாங்கள் தேர்வு அறையில் இருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. எங்களது ஆசிரியர்கள் எங்களிடம் அமைதியாக அனைவரும் தரையில் படுங்கள் என்று சத்தமாக கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாங்கள் தரையிலேயே படுத்திருந்தோம். துப்பாக்கிச் சத்தம் நிற்கவே இல்லை. தொடர்ந்து கேட்டபடி இருந்தது. துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்தபோது ராணுவத்தினர் அங்கு வந்து எங்களை மீட்டுச் சென்றனர் என்றான். 16 வயதான ஷாருக் கான் என்ற சிறுவனின் இரு கால்களையும் சுட்டுள்ளனர் தீவிரவாதிகள். இந்தப் பையன், தனது வகுப்பறையின் டெஸ்க்குக்குக் கீழ் பதுங்கியிருந்தபோது அவனை வெளியே இழுத்து வந்து சுட்டுள்ளனர் தீவிரவாதிகள்.பள்ளிக்கூடத் தாக்குதல் : முதல் முறையல்ல… பாகிஸ்தானில் பள்ளிக் கூடங்களை தீவிரவாதிகள் குறி வைப்பது இது முதல் முறையல்ல. பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் உலகைக் கவர்ந்த முதல் சம்பவம் 2012ம் ஆண்டு மலாலா என்ற 15 வயது சிறுமியை தாலிபான் தீவிரவாதிகள் கொடூரமாக தாக்கியதுதான். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குக்கு ஒரு பள்ளிக்கூடம் இலக்காகியிருப்பது இதுவே மிகப் பெரிய சம்பவமாகும். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களும் அதிர்ந்து போயுள்ளனர், கொதித்துப் போயுள்ளனர். தீவிரவாதத்தின் கோரமுகத்தின் கொடூரத்தை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளனர். தீவிரவாதிகள் வேரறுக்கப்பட வேண்டும் என்ற குமுறல் அங்கு உரத்த குரலாக எழுந்துள்ளது. இதுவரை பட்டதெல்லாம் போதும். இனியும் தீவிரவாதிகளை நிம்மதியாக விடக் கூடாது, சுதந்திரமாக உலவ விடக் கூடாது என்ற கொதிப்பு அங்கு எழுந்துள்ளது என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்