20 October 2013 4:15 am
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் சுசீல்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, ஜெய்ராம், ரமேஷ், நாராயணசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே ஒரு தடவை கூடி பேசினார்கள். நேற்று மத்திய அமைச்சர்கள் குழு இரண்டாவது முறையாகக் கூடி ஆலோசனை நடத்தியது. அதில் அடுத்த மாதம் (நவம்பர்) 20–ந் தேதிக்குள் தெலங்கானா மசோதாவுக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. மாநிலத்தை பிரிக்கும்போது ஏற்படும் சட்டம் ஒழுக்கு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க அமைச்சர்கள் குழு கருத்து கேட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த இரு மாநில அதிகாரிகள் கொண்ட பொதுவான அமைப்பு ஏற்படுத்த நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஐதராபாத் நகரை தெலங்கானா, சீமாந்திரா இரு மாநிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக நீட்டிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் அலுவலகங்களை பிரிப்பது பற்றியும் பேசப்பட்டது. இந்த நிலையில் தெலங்கானா போராட்ட குழுவினர் ஐதராபாத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். 3 ஆண்டுகள் மட்டும் ஐதராபாத்தை பொது தலை நகரமாக இருக்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட வேண்டும் என்று தெலங்கானா தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.இதற்கு சீமாந்திரா பகுதி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திராவை பிரிக்கும் மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.