15 February 2014 4:03 am
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடந்தது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்கள் நேற்று திருப்பதி பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ்களை இயக்க கூடாது என கோஷமிட்டு பஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் உள்ள தெலுங்கு தாய் சிலை அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆந்திர பிரிவினைக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் சங்க உறுப்பினர்களான சீதா, ரமணம்மா ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை திடீரென திறந்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற தொண்டர்களும், போலீசாரும் விரைந்து வந்து அவர்களை தடுத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது ஆந்திராவை பிரிக்க கூடாது என்று கோஷமிட்டனர்.