15 February 2014 3:45 am
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொளத்தூர் மணி உள்பட 4 பேர் இன்று பிணையத்தில் விடுதலையானார்கள். சேலம் காந்திரோடு பகுதியில் வருமானவரி அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் சாக்குப்பையில் தீ வைத்து அதை அலுவலகத்தின் உள்ளே தூக்கி வீசி சென்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், அம்பிகாபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேர் மீதும் கடந்த நவம்பர் மாதம் 5–ந் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கொளத்தூர் மணி உள்பட 4 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த மாநகர போலீஸ் கமிஷனர் மஹாலியின் உத்தரவு செல்லாது என்று நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிலையில் கைது செய்த அஸ்தம்பட்டி போலீசார் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே ஜாமீனில் விடுவிக்கும்படியும் கேட்டு கொளத்தூர் மணி சார்பில் சேலம் 3–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதே போல் கிருஷ்ணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. இதில் 3 பேருக்கும் பிணையம் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இன்று காலை சேலம் சிறையில் இருந்து கொளத்தூர் மணி உள்பட 4 பேரும் விடுதலையானார்கள். அவர்களை பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை கண்ணன், பூமொழி, உள்ளிட்ட ஏராளமான பேர் வரவேற்றனர்.பின்னர் கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:– தேசிய பாதுகாப்பு சட்டம் தேவையற்ற கறுப்பு சட்டம். இதை ஐ.பி.எஸ். அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற இளைய நீதிபதிகள் இது செல்லாது என்று உத்தரவிடுகிறார்கள். இது மூத்த நீதிபதிகளுக்கு அவமானம். ஜனநாயக விரோதமான இந்த சட்டத்தை யார் மீதும் பயன்படுத்த கூடாது. எந்த நோக்கத்திற்காக சிறை சென்றோமோ, அதற்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர்கள் அனைவரும் அம்பேத்கார், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தன்னுடன் கைதான 3 பேரையும் அவர்களது வீட்டில் இறக்கி விட்டு பின்னர் கொளத்தூர் மணி தனது வீட்டிற்கு சென்றார். விடுதலையான கொளத்தூர் மணி உள்பட 4 பேரையும் வரவேற்க ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.