நீல எல் ஈ டி கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு - தமிழ் இலெமுரியா

17 October 2014 1:27 am

இந்த வருடத்தின் இயற்பியலுக்கான நோபெல் பரிசு 1990களின் ஆரம்பத்தில் நீல நிற எல் ஈ டி (Light Emitting Diode) விளக்கை கண்டுபிடித்ததற்காக ஜப்பானிய விஞ்ஞானிகளான பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதோடு வழங்கப்படுகின்ற எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் பரிசுத் தொகையை வெற்றிபெற்றவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். 1901ஆம் ஆண்டிலிருந்து இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கியுள்ள 196 பேர்களுடைய பட்டியலில் பேராசியர்கள் இசாமு அகாசகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நக்கமுரா ஆகியோரது பெயர்களும் தற்போது சேர்ந்துள்ளன. ஸ்வீடனில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக்குழுவினர் லைட் எமிட்டிங் டையோட் எல் ஈ டியின் பயன்பாட்டை வலியுறுத்தினர். மிகக் குறைவான மின் சக்தியிலேயே இயங்கக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான ஒளி ஆதாரமாக எல் ஈ டி விளக்குகள் அமைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒளி உமிழும் இண்கேண்டஸெண்ட் விளக்குகள் 20ஆம் நூற்றாண்டில் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கியது என்றால் 21ஆம் நூற்றாண்டின் உலகின் ஒளி ஆதாரமாக விளங்கப்போவது எல் ஈ டி விளக்குகள்தான் என தேர்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது. பச்சை நிறத்திலான எல் ஈ டியும், சிவப்பு நிற எல் ஈ டியும் நெடுங்காலமாகவே புழக்கத்தில் இருந்துவந்தாலும், நீல நிற எல் ஈ டி என்பது ஏராளமானோர் முயன்றும் கண்டுபிடிக்கப்பப்பட முடியாமலே இருந்துவந்தது. மற்ற இரண்டு நிறங்களோடு நீலமும் சேரும்போதுதான், வெளிச்சத்தின் ஆதாரமான வெள்ளை வெளிச்சம் உருவாகும். அப்படியிருக்க மற்ற விஞ்ஞானிகளும் தொழில்துறையும் முப்பது ஆண்டுகாலம் சாதிக்க முடியாமல் இருந்த ஒரு விஷயத்தை ஜப்பானில் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகியும், ஹிரோஷி அமானோவும், டொக்குஷிமாவில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த ஷூஜி நக்கமுராவும் சேர்ந்து சாத்தியமாக்கியிருந்தனர். இசாமுவும் ஹிரோஷியும் தொடர்ந்து நகோயா பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றுகிறார்கள். ஷூஜி அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றிவருகிறார்.வெள்ளை வெளிச்சம் தரும் எல் ஈ டி விளக்குகள் பல ஆண்டுகள் காலம் பழுதாகாமல் வேலை செய்யும், தவிர ஒளி உமிழும் இண்கேண்டசெண்ட் விளக்குகளை விட மிகவும் குறைவான மின் சக்தியிலேயே இவை இயங்கும். உலகில் கால்வாசி அளவான மின் சக்தி விளக்குகளில்தான் செலவாகின்றன என்ற நிலையில், எல் ஈ டி விளக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது, மின் உற்பத்திக்காக உலகின் இயற்கை வளங்கள் விரயமாவது கணிசமாக குறையும். மின்சார வசதி இல்லாத சூழ்நிலை உள்ளவர்கள் உலகில் நூற்றைம்பது கோடி பேர் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களுக்கும்கூட மின் இணைப்பு தேவைப்படாத விளக்கொளி ஆதாரமாக எல் ஈ டி விளக்குகள் விளங்க முடியும் ஏனென்றால் சூரிய சக்தியில் கிடைக்கக்கூடிய குறைவான மின்சாரத்திலேயே எல் ஈ டி விளக்குகள் சிறப்பாக எரியும்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி