10 November 2013 11:57 pm
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற சோகா இகேதா பெண்கள் கல்லூரி மாணவியர் 333 பேருக்கு பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக சென்னையிலுள்ள சோகா இகேதா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக தாகூர் அமைதி விருது பெற்றுள்ள அரபுநாட்டுப் பெருங்கவிஞர் முனைவர் சிகாப் ஞானம்,சிறப்பு விருந்தினர்களாக மதர் தெரேசா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திருமதி முனைவர் யசோதா சண்முகசுந்தரம், மும்பை தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். ஜப்பான், சோகா கக்காய் பன்னாட்டுப் பல்கலைக் கழக இந்தியப் பிரதிநிதி முனைவர் ஆகாஸ் கே. ஓவுசி, சோகா இகேதா கல்லூரியின் நிறுவனர் தைசாக்கு இகேதா அவர்களின் வாழ்த்துச் செய்தியினை வாசித்தார். இந்த விழாவில் கல்லூரி அறங்காவலர் திருமதி ஐராணி சேது, கல்வி ஆலோசகர் முனைவர் இரஞ்சிதக் கனி, கல்லூரி முதல்வர் டாக்டர் ராணி கிறிஸ்துதாஸ், கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் திருமதி ராணி கிறிஸ்துதாஸ் வாசித்தார். மாணவியர்களுக்கு பல்வேறு துறை பட்டங்களை வழங்கி சிறப்பித்த விருந்தினர்கள் அரபுக் கவிஞர்முனைவர் சிகாப் ஞானம், மதர் தெரேசா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திருமதி முனைவர் யசோதா சண்முகசுந்தரம், மும்பை தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிகாப் ஞானம் இந்தியப் பெண்களின் சமுக உரிமைகள் மற்றும் அரசியல், பொருளாதார மேம்பாடுகளில் இன்றளவும் நிலவும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார். மும்பை இலெமுரியா அறக்கட்டளை நிறுவனரும், தமிழ் இலெமுரியா ஆசிரியருமான சு.குமணராசன் பேசுகையில் இந்தியாவில் பெண்களுக்காக முதன் முதலில் பள்ளிக்கூடம் துவங்கப் பட்ட மாநிலம் மகாராட்டிரா மாநிலம் எனவும் மாகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் சமூகச் சிந்தனை பெண் கல்வியை உயர வழி வகுத்தது எனவும் குறிப்பிட்டார். உலகில் எத்தனையோ வேறுபாடுகளும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நம் சமுக அமைப்பில், பெண்கள் பிறப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக கருவிலேயே கொலை செய்து விடும் நிலையில் இங்கு 333 மாணவிகள் பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருவள்ளுவர்,கவிமணி தேசியவிநாயம் பிள்ளை, பாரதியார் ஆகியோரின் கவிதை வரிகளுடன் நினைவு கூர்ந்து,பெண்கள் சமுக மாற்றத்தின் அடித்தளமாக விளங்க வேண்டும் என குறிப்பிட்டார். பட்டமளிப்பு விழாவில் அனைத்து மாணவிகளும் எழுந்து நின்று காப்புறுதி எடுத்துக் கொண்டனர். கல்லூரியின் ஆண்டு மலரை சு.குமணராசன் வெளியிட்டார். இறுதியில் வணிகவியல் துறைத் தலைவர் திருமதி வி.சுஜாதா நன்றியுரையாற்றினர். விழாவில் அண்ணாப் பல்கலைக் கழக அறிவியலாளர்கள், சமுகத் தொண்டர்கள், ஜப்பான் நாட்டு மாணவிகள், பெற்றோர்கள் என மூவாயிரதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.