7 January 2014 5:28 am
பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு போதாது. அதை அதிகரிக்க நாங்கள் கோரிக்கை வைக்கப் போகிறோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கொள்கை வகுப்பாளரான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாதி, இன மற்றும் வகுப்பு வாரியான இட ஒதுக்கீடுகளில் ஆம் ஆத்மி கட்சி தற்போது தெளிவான கொள்கையை வகுத்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட கீழ் சாதியினர், பெண்கள், பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரப் போகிறோம் என்று அவர் தெரிவித்தார். சாதி, இட ஒதுக்கீடு குறித்து ஆம் ஆத்மி கவலைப்படுவதில்லை. மேல் தட்டு மக்கள், நடுத்தர வகுப்பினர் குறித்துத்தான் அது அதிக அக்கறை காட்டுகிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆம் ஆத்மியைக் குற்றம் சாட்டி வந்த நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பான தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யாதவ், சமீப காலம் வரை எங்களது கட்சி இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கையில் தெளிவாக இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தற்போது நாங்கள் தெளிவான கொள்கையுடன் வந்துள்ளோம். எங்களது கட்சியினர் பல்வேறு தரப்பு சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்தான். தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நாங்கள் கோருகிறோம். சாதி ரீதியிலான பாரபட்சம் இந்தியாவில் அதீதமாக உள்ளது. மேலும் இன மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடும் அதிகமாகவே உள்ளது. அதை சரி செய்யும் வகையில் நாங்கள் உழைக்கப் போகிறோம் என்றார் அவர். இருப்பினும் எவ்வளவு சதவீத இட ஒதுக்கீடு தேவை என்பது குறித்து யாதவ் விளக்கவில்லை. டெல்லியில் நடந்த தேர்தலின்போது தனித் தொகுதிகளில்தான் அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டது ஆம் ஆத்மி என்பது நினைவிருக்கலாம். மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் அக்கட்சிக்கு அதிக ஆதரவையும் கொடுத்துள்ளனர். தலித் வாக்குகளில் 29 சதவீதத்தை ஆம் ஆத்மி பெற்றது. மேலும், 12 தனித் தொகுதிகளில் 9 தொகுதிகளில் அது வென்றது. வழக்கமாக தலித் வாக்குகள் காங்கிரஸுக்கே கிடைக்கும். ஆனால் இம்முறை தலித் மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்வு செய்தனர். இதன் விளைவாக கேஜ்ரிவால் தலைமையிலான 7 பேர் கொண்ட அமைச்சரவையில் 2 தலித்துகளும் இடம் பிடித்தனர். பாஜகவுக்கு 28.8 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன.