26 March 2017 2:12 pm
இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஐ.நா மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் நிபந்தனைகளை நிறைவேற்ற 2015-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் வழங்கிய ஒன்றரை ஆண்டு அவகாச காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வைத்தனர்.இந்த நிலையில், தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சிலின் 34-ஆவது ஆண்டுக் கூட்டத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை சர்வதேச சமூகத்துக்கு அளி்த்த உத்தரவாதங்களை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கும் தீர்மானத்தை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக கொண்டுவந்தன.ஆனால் புதிய கால அவகாசம் தொடர்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எந்த நாடுகளிடம் இருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்று அங்கிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ரத்னம் தயாபரன் தெரிவித்தார்.ஐநா மன்றம், புதிய கால அவகாசம் வழங்கியதற்காக இலங்கை அரசு நன்றி தெரிவித்தது. சர்வதேச நாடுகள் இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வதாகவும் உறுதி அளித்தது.