மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ப. சிதம்பரம் - தமிழ் இலெமுரியா

15 December 2013 10:37 pm

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ.) அமைக்கப்பட்டதன் 20ஆம் ஆண்டு நாளையொட்டி, மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:(மக்களவை) தேர்தலுக்காக நாம் காத்திருக்கிறோம். ஆனால், அந்தத் தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் அரசமைக்குமா? என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. மக்களாட்சி நாடான இந்தியா, தற்போது இக்கட்டான கால கட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த 60 ஆண்டு கால இந்திய மக்களாட்சியில், தற்போது மோசமான நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். இதில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் அரசு நிருவாகம் பாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றமும் முழுமையாக முடங்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு சில அமைப்புகளின் எல்லை மீறிய செயல்பாடுகளே காரணமாகும். நமது அனைத்து பிரச்னைகளுக்கும் நீதித்துறை மூலமே தீர்வு காணலாம் என்று நினைப்பது தவறாகும். அரசின் 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சட்டங்களை நிறைவேற்றவது, நாடாளுமன்றத்தின் பணியாகும். அதனை நீதித்துறை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசு இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் முடிவெடுக்கக் கூடாது. இந்தியாவில் பலவீனமான அரசு இருப்பதாக கூறப்படுவதை வைத்துக் கொண்டு, நமது நாட்டில் பலமான நிதி அமைச்சகம் இல்லை என்று பொருள் செய்து கொள்ளக் கூடாது என்று ப. சிதம்பரம் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி