15 October 2015 3:41 pm
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும் அவர்களை போலீஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. தாக்கப்பட்டவர்கள், முன்னதாக மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக வதந்திகள் பரவியிருந்ததாகக் கூறும் அதிகாரிகள், ஆனால் உண்மையில் ஏற்கனவே இறந்துவிட்ட மாடு ஒன்றின் தோலையே அவர்கள் நீக்கி எடுத்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வாரத்தின் முற்பகுதியில், காஷ்மீர் மாநில சட்டசபையின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் மாட்டிறைச்சி தடையை மீறி விருந்து ஒன்றில் மாட்டிறைச்சி உணவை வழங்கியதாகக் கூறி இந்தியாவின் ஆளும் பா.ஜ.க உறுப்பினர்கள் அவரை தாக்கியிருந்தனர். இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இந்துக்களில் பலரும் சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.