19 June 2014 1:00 am
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என கடந்த மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தவும் அனுமதி அளித்தது. அத்துடன், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தின் அளவை உறுதி செய்யவும், அணையின் பாதுகாப்பு பணிகளைக் கண்காணிக்கவும் மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவுக்கு மத்திய நீர் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தலைவராகவும், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி உறுப்பினர்களாகவும் இடம்பெறுவர் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் தலைமையமைச்சர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றார். இதைத் தொடர்ந்து விரைவில் முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.