யாகூப் மேமனின் மரண தண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். - தமிழ் இலெமுரியா

22 July 2015 3:42 pm

1993ல் நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர். அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2007ல் யாகூப் மேமனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது. சார்ட்டட் அக்கவுண்டன்டான யாகூப் மேமன் இந்தச் சதியில் முக்கியப் பங்கு வகித்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. யாகூப் மேமன் தற்போது நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குண்டுவெடிப்பை திட்டமிட்டு, நிதியுதவி வழங்கியதாக மேமன் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவரது மூத்த சகோதரர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். பிற மூன்று குடும்ப உறுப்பினர்கள் சாட்சியம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்பின் முக்கியச் சதிகாரர்களாக கருதப்பட்ட தாவூத் இப்ராஹிமும் டைகர் மேமனும் 1993லிருந்து தேடப்பட்டுவருகின்றனர். இந்தியாவில் தூக்குத் தண்டனைகள் அரிதாகவே நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டிருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்டு, உயிருடன் பிடிக்கப்பட்ட முகமது அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அஃப்சல் குரு 2013ல் தூக்கிலிடப்பட்டார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி