ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்வது தொடர்பில், குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத - தமிழ் இலெமுரியா

25 March 2014 8:37 am

இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், 435 சட்டப் பிரிவின்படி இந்த வழக்கில் விடுதலை செய்வது தொடர்பில் மத்திய அரசின் முடிவு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இவ்வாறு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளை விடுவிக்க, தன்னிச்சையாக தமிழக அரசு திட்டமிட்ட நடவடிக்கை ஏற்கமுடியாதது என்றும் அந்த பதில் மனுவில் கூறியுள்ளது.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில் நடைபெற்ற விசாரணை, இந்த மாதம் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, தமிழக அரசின் பதில் மனுவுக்கு மத்திய அரசு தரப்பின் பதிலை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதனால் அப்போது இந்த வழக்கை வரும் மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. அதே சமயம் இது குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பதில் மனுக்களை விட குற்ற விசாரணை முறைச் சட்ட விதிமுறைகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றனர்.தமிழக அரசின் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா இந்த மாதம் கடந்த 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், அதில் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432-ன் கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் இந்த 7 பேரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனை பெறுவதற்காக நோட்டீஸ் ஒன்று அனுப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அதற்கு பதிலளிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.அதனை தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி