22 September 2013 12:18 am
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து இதுவரை விசாரிக்கப்படாத பல்வேறு கோணங்களில் தீர ஆராய வேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அம்மனுவினை விசாரணைக்கு ஏற்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையின் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு கடந்த வியாழனன்று உத்திரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் உட்பட மூவர் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், நீதிபதி ஜெயின் கமிஷனின் பரிந்துரைகளைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவென அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு அவ்வாறு விசாரணை நடத்தவில்லை; மேலும் கொலை தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட மூவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தனியே வழக்கு நடத்தப்படும் எனவும் அறிவிக்க்ப்பட்டது. அவ்வழக்கிலும் முன்னேற்றமெதுவுமில்லை.ஆனால் இரு தளங்களிலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு நம்பகமானவை என்பது தெரியவரும். எனவே அவ்வாறு மத்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்புக் குழு அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருக்கிறார். அதன் மீது விளக்கம் அளிக்கும்படி நீதிபதி வணங்காமுடி மத்திய புலனாய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டார்.