18 November 2016 5:26 pm
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளால் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாததாலும், கடன்களை வழங்க முடியாததாலும் இந்த ஆண்டில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்களுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.பெரும்பாலான கிராமப்புற மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சேமிப்புக் கணக்கின் மூலம் பணத்தைச் செலுத்திவரும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் செல்லாத நோட்டுகளைப் பெறக்கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் தங்கள் கணக்குகளில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.மேலும், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலிருந்து தாங்கள் வாங்கிய பயிர்க்கடன்களை விவசாயிகளால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், புதிதாக பயிர்க்கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க் கடன்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 7-ஆம் தேதி வரை சுமார் 2,075 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், கடன் இலக்கை இந்த ஆண்டில் எட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இதனால், தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுமென்றும் அறிக்கை தெரிவிக்கிறது.