16 April 2017 6:06 pm
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அவர்களது விதிப்பயன் என்பதைப் போல, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கடுமையாகக் கண்டிப்பதாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாகவும், மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுநல வழக்களுக்கான தமிழக மையம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதை விசாரித்தது. தமிழகத்தில் பல விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவித்தார். தமிழக அரசு விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டினார்."விவசாயிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. விவசாயிகள் விதிவசத்தால் தற்கொலை செய்வதைப் போல் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் குறைகள் என்ன, எப்படித் தீர்வு காண்பது, எதற்காக தற்கொலை செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்குத் தீர்வு கண வேண்டும்" என்று நீதிபதிகள் மிகக்கடுமையான கருத்துக்களுடன் உத்தரவு பிறப்பித்தார்கள்.தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதில் மத்திய அரசையும் முக்கிய பிரதிவாதியாக சேர்க்குமாறு மனுதாரர் கேட்டார். ஆனால், முதல் கட்டமாக தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தேவைப்ப்டால் மத்திய அரசிடம் கேட்கிறோம் என இரண்டு வாரத்துக்கு அந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.