5 July 2013 4:50 pm
நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக டெல்லியில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். குஜராத் முதல்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். ஆனால், இதை ஏற்க அத்வானி மறுத்துவிட்டார். எக்காரணம் கொண்டும் எதியூரப்பாவுடன் சமரசமே கூடாது, அவரை கட்சியில் மீண்டும் சேர்க்கவே கூடாது என்று அத்வானி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் உள்ளதால், அந்தக் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டால் வரும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்று நரேந்திர மோடி கூறியதை அத்வானி ஏற்க மறுத்துவிட்டார்.
ஊழல்வாதியை கட்சியில் சேர்த்து தேர்தலில் வெல்வதைவிட பேசாமல் தோல்வியடைந்துவிட்டே போகலாம் என்று அத்வானி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அத்வானியின் எதிர்ப்பையும் மீறி விரைவில் எதியூரப்பாவை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதியூரப்பாவும் மோடிக்கு ஆதரவான நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.