28 July 2013 4:22 pm
தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு அறிவிக்க இருக்கிறது. 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனி தெலுங்கானா அல்லது ராயலசீமாவின் கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களையும் இணைத்து ராயல தெலுங்கானா என்ற இரண்டில் ஒன்றை காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது. ஆந்திராவை பிரிப்பது என்ற காங்கிரஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் 15 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். இவர்கள் அனைவரும் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். ஏற்கெனவே ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஜெகன் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான கிருஷ்ணா ரெட்டி, அடலா பிரபாகர் ரெட்டி ஆகியோரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ளனர். அனேகமாக தெலுங்கானா தொடர்பான நிலைப்பாடு எடுத்த கையோடு ஆந்திர சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளக் கூடும் என தெரிகிறது.