24 July 2013 2:18 pm
கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆவதை சுட்டிக் காட்டி தூக்கு தண்டனைய குறைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புகின்றனர். அந்த மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டி தூக்கை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. அப்படியான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்களில் 2 அல்லது 3 நீதிபதிகளைக் கொண்ட சிறிய பெஞ்சுகள் முரண்பாடான தீர்ப்புகளை அளிக்கின்றன. இந்த முரண்பாடுகளை தீர்த்து அதிகாரப்பூர்வ தீர்ப்பு வழங்க 5 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும். அந்த பெஞ்சு மட்டுமே இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்.