22 October 2017 12:11 pm
நோயற்ற மனிதன்தான் நிரந்தர இளைஞன்! இன்றைய நிலையில் பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில்சிறு நோய் கொண்டவர் களாகத்தான் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறோம்.எல்லாரும் ஏன் நோயாளிகளானோம்? நோய் என்பது தானாக வருவதில்லை. நாமாக இழுத்துக் கொள்வது! நோய் நம்மைத் தேடி வருவதே இல்லை. நாம்தான் நோயைத்தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம். நாம்தான் மரணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். வள்ளுவன் எப்படி’மருந்தென வேண்டாம்’ என்றான்? மருந்தே இல்லாமல் நோய் தீர்ந்துவிடுமா?மருந்தும் விருந்தும் மூன்று வேளைக்கு என்பார்கள்! ஆனால் இன்றைய நோயாளிகள் ஆண்டுக்கணக்காக, ஆயுட்காலம் வரையில் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியானால்?எங்கோ தவறு நடந்து கொண்டிருக்கிறது. சிகிச்சை முறையில் என்னவோ பித்தலாட்டம் நடக்கிறது! சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு மக்களை நிரந்தர நோயளிகளாக்கும் ‘பொம்மை பித்தலாட்டம்’ நடந்து கொண்டிருக்கிறது! நாம் ஐயப்படவே இல்லையே! நாம்தான் தவறி விட்டோம். நல்லது செய்வது போன்று நாடகமாடி, மக்களை நோயாளிகளாக்கியது நம் அரசு. இது நமக்கான அரசு இல்லை; யாருக்காகவோ இயங்கிக் கொண்டிருக்கும் அரசு என்று இப்போதுதான் துணிச்சலுடன் எண்ணத் தொடங்கியுள்ளோம்.பள்ளி இல்லாத ஊரில் படிக்காதவர்கள் இருப்பார்கள்; பிறகு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், அந்தந்த அளவில் படித்தவர்கள் பெருகிவிடுவார்கள். அந்த ஊரில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலையைத் தொட்டுவிடுவோம்.கல்வி நிலையங்கள் பெருகப் பெருக படித்தவர்கள் மிகுந்து படிக்காதவர்களே இருக்க முடியாது என்பதுதான் உண்மையானதாக இருக்கவேண்டும். ஆனால், மருத்துவமனை இல்லாத காலத்தில் கூட, நோயாளிகளே இல்லாதிருந்த நிலைபோய், மருத்துவமனை பெருகப் பெருக நோயாளிகளும் பெருகிக் கொண்டிருக்கிறோமே எப்படி? மருத்துவச் சேவையில் நடைமுறையில் எங்கோ தவறு இருக்கிறது. மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்; புதுப் புது நோய்கள் எப்படியோ பரப்பப் பட்டு வருகிறது என்று ஏன் ஐயப்படவே இல்லை?மக்களுக்கு நன்மை செய்வதாக பீற்றிக் கொண்டு நம்மை நிரந்தர நோயாளிகளாகப் பெருகுவதற்கும் மருந்து மாத்திரைகள் மக்கள் வாங்கித்தீர வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டு, மருந்து கம்பெனி முதாலாளிகள் பெருகி வளர வழிவகை செய்வதுதான் அரசினரின் நோக்கம் என்பதாக ஏன் நாம் எண்ணிப் பார்க்கவே இல்லை. நடப்பைப் பார்த்தாகிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? சமுதாய தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் கூட இப்பொருள் பற்றி சிந்திக்கவே இல்லை என்பதுதான் யதார்த்தம். நூல்கள் பரிசுப்போட்டி, கட்டுரை, கவிதை பரிசுப் போட்டிகள் இலக்கிய வாழ்வியல் ஆர்வலர்களால் நடத்தப் படுவதில் கூட, மருத்துவ நூல்களுக்கான பரிசுகள் அறிவிக்கப் பட்டதில்லையே! ‘அறிவியல் நூல்கள்’ என்ற பெயரில் அனுப்பப் பட்ட மருத்துவ நூல்கள் தள்ளுபடி செய்யப்பட்ட வரலாறுகள் நிரம்ப இருக்கின்றனவே தவிர, மருத்துவ நூல்களுக்குப் பரிசு அளிக்கப் பட்டதில்லையே! இத்தனைக்கும் பரிசு நூல்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர் மிகப் பெரிய நிரந்தர நோயாளி. தான் சிகிச்சை என்ற பெயரில் சுரண்டப் படுகிறோம் என்பதைக்கூட உணர முடியாத இலக்கியவாதி என்பது கேவலம்தானே! மருத்துவம் என்பது அறிவியல் இல்லையா? ஏன் சிந்திக்க தவறுகிறோம்? அதாவது அறிவியலாளர்கள், அறிஞர்கள், சிற்றிதழ் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமுதாய முன்னேற்ற கவிஞர்கள், நீதி நெறிவழிகாட்டிகள், தமிழ் பற்றாளர்கள் கூட இதுவரை, ‘நடைமுறை மருத்துவம்’ பற்றி சிந்திக்கவே இல்லை. தெளிவான சிந்தனை இல்லை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.நோய் என்பது நன்மைக்கும் தீமைக்கும் அறிவுக்கும் அறியாமைக்கும் மூட்டி விடப்பட்ட போர்களின் விளைவுதானே! ஆடுகள் அறுக்கப் படும்போது இரத்தத்தை பிடிப்பார்களே அதுபோல, பசுக்கள் அறுக்கப் பட்டு துடித்துக் கொண்டிருக்கும் போது கடைசி சொட்டு பாலை கிண்ணங்களில் கறந்து கொண்டுள்ள காட்சியை சென்னையில் பார்த்தவர்கள் உண்டு. உயிர்ம நேயமற்ற செயல். சிலமருந்து நிறுவனங்கள் வளர்வதற்காக நாட்டு மக்களையே நாசமாக்குவது படு பாதகச்செயல் அல்லவா?நோய் என்பது இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கும் போர். அவ்வளவுதான் இந்தப் போராட்டம் எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா?‘இயற்கை மீறல்கள்’தான் இயற்கை என்று நம்ப வைக்கப்பட்ட ‘நாகரிகப் போர்வை’க்குள் என்றைக்கு ஒளியத் தொடங்கினோமோ அன்றே தொடங்கிவிட்டது.பகல் என்பது பணிசெய்ய; இரவு என்பது ஓய்வுகொள்ள. நம் உடல் தசைநார்கள் செல்கள் எட்டு மணிநேர ஓய்வு கேட்டு, இழந்த சக்தியை மீளப்பெற்று, சோர்வடைந்த தசைநார்களை முறுக்கேற்றி இயல்பு நிலைக்கு மாற்றிக் கொள்ளத்தான் இரவு. சரியா? அப்படியாயின் இரவில் கண் விழித்திருப்பது, வேலை செய்வது இயற்கைக்கு மாறானது. ‘தொழிற் புரட்சி’ தொடங்குவதற்கு முன் உலகமே இரவில் உறங்கிக் கொண்டுதானே இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இப்படித்தானே!தொழில் துறையில் பிறநாடுகளுடன் ஒப்பிட்டு, உழைத்து, பின் தங்கியிருந்த நிலை மாறி, இன்று அனைத்து நாடுகளிடமும் போட்டி போடும் அளவிற்கு உயர்வை எட்டிவிட்டோம். இனியும் இரவு வேலை என்பது தேவைதானா?இதனை மாற்றி ஓய்வுக்கு வழிவகுக்கும் நிலைக்கு நம் மக்களை வழி நடத்துவது நம் கையில்தானே இருக்கிறது. மக்களின் திடகாத்திர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நாடு முழுதும் இரவு நேரப் பணியை நிறுத்திவிடலாம். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஆண் மலடே இருக்காது.பகலில் வேலை செய்து இரவில் உறங்கி எழும் போது நம் உடல் எப்படி இருக்கிறது? இரவில் கண் விழிக்க நேரும் போது நம் உடல் நிலை இயக்கம் எப்படி இருக்கிறது? என்பதை உணர்ந்து பார்த்தால் உண்மையை அறிய முடியும்.அத்துடன் இன்னுமொன்று. காலை என்பதே கருக்கல்தான் ஆரோக்கியம் என்பதே அதிகாலையில்தான். யார் அதிகாலையில் எழுந்து விடுகிறார்களோ, அவர்கள்தான் நல்லுடல்காரர்கள். விடுமுறை நாள் என்றால் மட்டும் எப்படி நண்பகல் வரை தூங்க முடிகிறது என்பதுதான் புரியாதப் புதிர்.மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் விடிந்தும் உறங்கிக் கிடப்பதில்லை. ஆம்தானே! தூங்கித் தூங்கியே நோயினைத் தேடிக் கொண்டு விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாம்தானே!பசி, பட்டினி வறுமையால், உண்ணாத நிலையால் நோய் பெருகியது அன்றையக் காலம். தின்று கொண்டே இருப்பதால் நோய் பெருகுகிறது என்பது இன்றைய காலம்.ஆக,(1) அதிகாலையில் எழுந்திட வேண்டும். (2) வாயைக்கட்டி நோயைக் கட்டவேண்டும்.(3) உழைக்கும் நேரத்தில் உழைத்து, ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஓய்வு கொள்ள வேண்டும் என்ற இயற்கையின் விதியினை மாற்றாமல் வாழவேண்டும். உடல் நிலைக்கு ஏதாகிலும் பங்கம் வருவது போன்று உணர்வு வந்தால் ஒரு வேளை-ஒருநாள்-பட்டினி(உண்ணாநிலை) மேற்கொண்டாலே சரியாகிவிடும். அதனால்தான் காய்ச்சல் அடிக்கும்போது எதுவும் சாப்பிட்டுத் தெலையாதே என்பதற்காகவே வாய்புளிப்பும். அதையும் மீறி விழுங்கி வைத்தால் கசப்புணர்வையும் கொடுத்து இயற்கை நம்மை எச்சரிக்கின்றது என்று தெளிவு பெற வேண்டும்.இத்தனையும் மக்களுக்கு அடிப்படைக் கல்வி மூலம் எடுத்துச் சொல்லி, நல்வழி படுத்தும் அரசுதான் வேண்டும். இப்படிப் பட்ட நாட்டில்தான் நோயற்ற மனிதர்கள் – இளைஞர்கள் நிரம்பியிருப்பார்கள். மக்கள் அனைவரும் மலடு, ஆண்மைக் குறைபாடு போன்ற இரகசிய நோய் கூட அண்டவிடாமல் மகிழ்ச்சி கரமாக வாழ்வார்கள்.இல்லாது போனால் வளம் குன்றிவிடும். மழையும் பொய்யாமல் (ஆழிப்பேரலை என்ன அதற்கு மேலும் நாட்டை தாக்கி) அரசுக்கு அறிவு புகட்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்’ ஆகிவிடும் என்று இளங்கோவடிகளும் எச்சரிக்கை விடுக்கவில்லையா?பெய்வது போல மேகம் கூடினாலும் பெய்யாமல் விலகிவிடும் என்று வள்ளுவனின் எச்சரிக்கையை புறந்தள்ள முடியாது. எங்கெங்கெல்லாமோ வெள்ளம் ஓடுகிறது; இங்கே வறட்சி; மழை இன்மை, நீருக்கான போராட்டம். இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்?இயற்கையை மாற்ற நினைத்தால், அது நம்மை வஞ்சித்துவிடும்; அதன் தண்டனையை தாங்கிட முடியாது! இயற்கையை மதிக்கத் தவறினால் நோய்! நோயே!!