14 October 2013 9:12 am
இன்றைய நவீன உலகின் முன்னேற்றத்தில் கணினி (கம்ப்யூட்டர்) பெரும் பங்கு வகிக்கின்றது. நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது என்று கூறலாம். கணினி நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக ஆக்கிவிட்ட போதிலும் அதனைச் சார்ந்த சில சிரமங்கள் தலை தூக்கி இருக்கின்றன. தினமும் கணிசமான நேரம் கணினியில் பணி செய்பவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இவற்றை இ-பெயின் (e-pain; Electronic Eye Pain) என்கின்றனர்.கணினியில் தொடர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கீழ்க்கண்ட பாதிப்புகள் இதனால் வரலாம்1. கண்களில் வலி2. கண் சிவப்பாதல்3. கண்களில் நீர் வடிதல்4. தலை வலி, கழுத்து வலி, முதுகு வலி5. களைப்பு6. கண்களில் எரிச்சல்7. இரட்டைப் பார்வை, கவனம் சிதறுதல்.8. கண்களைத் தவிர கை, மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி ஏற்படலாம்.இந்த பாதிப்புகள் எதனால், எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் அவைகளை வரும்முன் தவிர்க்கலாம். கணினி திரையைப் பாதிக்கக்கூடிய எந்தக் கதிர்களையும் வெளிப்படுத்துவதில்லை. இதனால் நேரடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும், கீழ்க்கண்ட காரணங்களால் பாதிப்புகள் உண்டாகலாம்.1. கண்களுக்கும் திரைக்கும் குறுகிய இடைவெளி மற்றும் தொடர்ந்து நெடு நேரம் திரையை பார்த்துக் கொண்டு இருத்தல்.2. நெடுநேரம் வரை கண் சிமிட்டாமல் இருத்தல் (சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 18 முறை இமைகள் மூடித் திறக்கின்றன. இதனால் கருவிழி ஈரமாக இருக்கின்றது. இது நடைபெறாமல் இருக்கும் பொழுதுதான் பாதிப்பு ஏற்படுகிறது)இந்த குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாக்க கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்.1. கணினியின் திரைக்கும், நம் கண்களுக்கும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி தூரம் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வேறு பொருளைப் பார்க்கலாம்.2. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒன்றுஅல்லது இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடம், தூரத்தில் உள்ள இயற்கைக் காட்சியை ரசிக்கலாம்.3. கண்களை அதிக முறை மூடித் திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.4. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து 35யி கோணத்தில் கணினியின் திரையைப் பார்க்கவும்.கண்குவியல் பயிற்சி (Convergence Exercise) ஒரு நாற்காலியில் நிமிர்ந்து தொலைதூர சிறு பொருளை பார்க்கவும். பேனாவை கண்களுக்கு நேராக இரு கை தூரத்தில் உயர்த்திப் பிடித்து அதன் முனையைப் பார்க்கவும். மெதுவாக அதை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து இரண்டு பிம்பங்கள் தெரியும் தூரத்தில் நிறுத்திக் கொள்ளவும். இப்பொழுது பேனாவின் நுனி மிகத் தெளிவாக தெரியும். இந்த நிகழ்ச்சி முப்பது வினாடிகளுக்கு நீடிக்கலாம். மீண்டும் மெதுவாக பழைய இடத்திற்கு எடுத்துச் செல்லவும். 30 வினாடிகளுக்கு பிறகு மீண்டும் இதே மாதிரி செய்யவும். இந்த பயிற்சியை 10 முறை செய்துவிட்டு மீண்டும் தொலைதூர சிறு பொருளைப் பார்க்கவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது 5 அல்லது 10 நிமிடங்கள் வரை செய்யலாம். தொடக்கத்தில் இந்தப் பயிற்சி சிறிது கண் வலி, தலைவலியை கொடுத்தாலும் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் செய்த பின் முழு குணமடைவு பெறலாம். இந்த பயிற்சியை இரண்டு மாதம் செய்தால் கண்ணின் தசை நார்கள் பலமும், உறுதியும் பெறும்.சொட்டு மருந்து தினமும் மூன்று அல்லது நான்கு முறை கண் மருத்துவர் கூறும் சொட்டு மருந்து இடுவதால் கண்களில் எரிச்சல், சிவப்பு தன்மை குறைந்து கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். டியர் ப்ளஸ் (Tear Plus), மொய்சல் (Moisol) போன்ற பல சொட்டு மருந்துகள் மருந்தகத்தில் கிடைக்கின்றன. பொதுவாக இவை கண்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதில்லை என்றாலும் சொட்டு மருந்து இட்ட பின் எரிச்சல், சிவப்பு தன்மை, வீக்கம் தோன்றினால் உடனடியாக மருந்து இடுவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.- கண் மருத்துவர் என்.எஸ்.சுந்தரம்.